புதுடெல்லி: டோனல்ட் டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபராகப் பதவியேற்கவிருப்பது இந்தியத் தகவல் தொழில்நுட்பத் துறையினருக்கு மகிழ்ச்சி அளித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.
அமெரிக்கக் குடிநுழைவுச் சட்ட விதிகளில் கடுமையான மாற்றங்களை ஏற்படுத்த வாய்ப்பிருந்தாலும் இந்தியத் தகவல் தொழில்நுட்பத் துறையினரிடம் நம்பிக்கை மேலோங்கியுள்ளது.
டிரம்ப் கடந்த முறை அதிபராக இருந்தபோது எச்-1பி விசா ஊழியர்களின் ஊதியமும் விசா கட்டணமும் அதிகரித்தன.
இப்போதைக்கு 85,000 எச்-1பி விசாக்கள் வழங்கப்பட்டுவரும் நிலையில், டிரம்ப் நிர்வாகம் அதனை மறுபரிசீலனை செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடுமையான பரிசீலனைக்கு பிறகே எச்-1பி விசா விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.
டிரம்ப்பின் முன்னைய ஆட்சிக்காலத்தின்போது, அதற்குமுன் இல்லாத வகையில், எச்-1பி விசா விண்ணப்பங்கள் நிராகரிப்பு 24 விழுக்காடாக உயர்ந்தது.
இப்படிப் பல கவலைகள் இருந்தாலும், டிரம்ப்பின் வெற்றியை அடுத்து தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்கு விலைகள் ஏற்றம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், டிரம்ப்பின் மறுவருகை இந்தியத் தகவல் தொழில்நுட்பத் துறையினருக்கு நம்பிக்கை அளித்துள்ளதற்கு நான்கு அம்சங்கள் முக்கியக் காரணங்களாகப் பார்க்கப்படுகின்றன.
முதலாவதாக, அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவடைந்து வருவது. பெரும்பாலான இந்தியத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் டாலரிலேயே வருவாய் ஈட்டுகின்றன. அதே நேரத்தில், அவரது நடைமுறைச் செலவுகள் இந்திய ரூபாயில் மேற்கொள்ளப்படுகின்றன.
அடுத்ததாக, செனட் சபை, அமெரிக்க நாடாளுமன்றம், அரசாங்கம் என அனைத்திலும் டிரம்ப்பின் குடியரசுக் கட்சியின் கை ஓங்கியிருப்பதால் கொள்கை முடிவுகள் நிலையானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மூன்றாவதாக, பெருநிறுவனங்களுக்கான வரியை 21 விழுக்காட்டிலிருந்து 15 விழுக்காடாகக் குறைக்க வேண்டும் என்பது டிரம்ப்பின் பரிந்துரை. இது, அமெரிக்காவில் பதிவுசெய்துள்ள இந்தியத் தொழில்முனைவர்களுக்கும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் பயனளிக்கும்.
இறுதியாக, கடந்த முறை போலவே இம்முறையும் சீனாவிற்கு எதிராக டிரம்ப் கடுமையான நிலைப்பாட்டை கையிலெடுப்பார் என எதிர்பார்க்கப்படுவதால், அமெரிக்காவிலிருந்து அதிகமான முதலீடு இந்தியாவிற்கு வரலாம். இதனால், செயற்கை நுண்ணறிவு, பகுதி மின்கடத்திகள் போன்ற நவீன தொழில்நுட்பங்களில் அமெரிக்க முதலீடு அதிகரிக்கக்கூடும்.