பத்தனம்திட்டா: நாள்தோறும் அதிகாலையில் கூவி உறக்கத்தைக் கெடுப்பதாகக் கூறி, சேவல்மீது ஆடவர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
இந்தியாவின் கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டம், பள்ளிக்கல் எனும் சிற்றூரைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ண குருப்.
முதியவரான குருப்பால் இரவில் நிம்மதியாக உறங்க முடியவில்லை. அண்டை வீட்டுக்காரரின் சேவலே அதற்குக் காரணம் என்கிறார் அவர்.
தமது அண்டை வீட்டுக்காரரான அனில்குமார் என்பவர் வளர்த்து வரும் அச்சேவல் அதிகாலை 3 மணிக்கே கூவுவதால் தமது உறக்கம் மட்டுமின்றி, தமது அமைதியான வாழ்க்கையும் கெடுவதாகக் கூறி, அடூர் வருவாய் வட்டார அலுவலகத்தில் குருப் புகார் அளித்துள்ளார்.
அவரது புகாரை அதிகாரிகளும் தீவிரமாக எடுத்துக்கொண்டனர்.
அதன் தொடர்பில் விசாரணை நடத்த வட்டார வளர்ச்சி அலுவலர் உத்தரவிட்டார்.
அதுகுறித்துக் கலந்துபேச குருப், குமார் இருவரும் அழைக்கப்பட்டனர். பின்னர் சம்பவ இடத்திற்கும் அதிகாரிகள் சென்று பார்த்தனர்.
அப்போது, குமார் தமது வீட்டின் மாடியில் சேவல்களை அடைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
சேவல்கள் குருப்பிற்குத் தொல்லையாக இருந்ததும் விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டது.
அண்டை வீட்டுக்காரர்கள் இருவருக்கும் இடையிலான பூசலைத் தீர்க்கும் விதமாக, சேவல்களை இடம் மாற்றி, வீட்டின் தென்புறமாக அவற்றை அடைத்து வைக்கும்படி குமாருக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதற்கு 14 நாள் கெடுவும் விதிக்கப்பட்டுள்ளது.