காசர்கோடு: உலோகத் திருகுமரையில் (nut) பிறப்புறுப்பு சிக்கிக்கொண்ட நிலையில் ஆடவர் ஒருவர் மருத்துவமனைக்கு வந்த சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது.
இந்தியாவின் கேரள மாநிலம், காசர்கோட்டைச் சேர்ந்த அந்த 46 வயது ஆடவர் வலி தாங்க முடியாமல் கடந்த வியாழக்கிழமை (மார்ச் 27) இரவு 8 மணியளவில் மாவட்ட மருத்துவமனைக்குச் சென்றார்.
சலவைத் தொழிலாளியான அவரது பிறப்புறுப்பு ஒன்றரை அங்குலத் திருகுமரையில் மாட்டிக்கொண்டதால் அது வீங்கிப்போயிருந்தது. அதனால், சிறுநீர் கழிக்க முடியாமல் அவர் துன்பப்பட்டார்.
பிறப்புறுப்பிலிருந்து திருகுமரையைக் கழற்ற மருத்துவர்கள் பெரிதும் முயன்றனர். ஆனால், அவர்களாலும் அதனை விடுவிக்க முடியவில்லை.
அதனைத் தொடர்ந்து, தீயணைப்புத் துறையின் உதவி நாடப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் அந்தத் திருகுமரையை வெட்டியெடுக்க முடிவுசெய்தனர். ஒருமணி நேர முயற்சிக்குப்பின் வெற்றிகரமாக அந்த ஆடவரின் பிறப்புறுப்பு சிக்கியிருந்த திருகுமரையை அவர்கள் வெட்டியெடுத்தனர்.
சற்றுப் பிசகினாலும் உயிருக்கு உத்தரவாதமில்லாத நிலை. வெட்டுகருவியைக் கொண்டு வெட்டும்போது திருகுமரை சூடேறினால் உறுப்பு வெந்துபோகக்கூடும்.
அதனைத் தவிர்ப்பதற்காக, அப்பகுதி முழுவதும் தண்ணீர் ஊற்றப்பட்டு, சூடேறாமல் பார்த்துக்கொள்ளப்பட்டது. இதனால், திருகுமரையை வெட்டியெடுக்க நெடுநேரமானது.
தீயணைப்புக் குழுவினர் இரு பக்கத்திலிருந்தும் திருகுமரையை வெட்டியெடுத்து, அந்த ஆடவரின் உயிரைக் காப்பாற்றினர்.
தொடர்புடைய செய்திகள்
தான் போதையிலிருந்தபோது சிலர் அந்தத் திருகுமரையைத் தமது பிறப்புறுப்பில் நுழைத்துவிட்டதாக அந்த ஆடவர் தெரிவித்தார். இரு நாள்களாக அவர் அதனைக் கழற்ற முயன்றும் அவரால் முடியவில்லை. சிறுநீர் கழிக்கும்போது தாங்க முடியாத வலி ஏற்பட்டதாலும் சிறுநீர் கழிக்கச் சிரமமாக இருந்ததாலும் அவர் மருத்துவமனையை நாடினார்.

