விமான விபத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு டாடா குழுமத்திடம் இழப்பீடு கோரும் மருத்துவச் சங்கம்

2 mins read
5f8d45d5-231d-414c-a431-2935b69bf3b1
விமானத்தின் உடைந்த பாகத்தைப் பாரந்தூக்கி கொண்டு அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள். - படம்: இபிஏ
multi-img1 of 2

அகமதாபாத்: அண்மைய ஏர் இந்தியா விமான விபத்தில் பாதிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவு வழங்கக் கோரி இந்திய மருத்துவச் சங்கத்தின் குஜராத் கிளை ‘டாடா சன்ஸ்’ குழுமத் தலைவருக்குக் கடிதம் அனுப்பியுள்ளது.

கடந்த வியாழக்கிழமை (ஜூன் 12) நேர்ந்த விபத்தில் ‘பிஜே’ மருத்துவக் கல்லூரி மாணவர்களில் சிலர் உயிரிழந்தனர்; மேலும் பலர் காயமடைந்தனர்.

“விபத்தில் உயிரிழந்த பயணிகளின் குடும்பங்களுக்கு ஏர் இந்தியா நிறுவனம் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு அறிவித்திருப்பதற்கும் பிஜே மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியைப் புதுப்பித்துத் தர முன்வந்திருப்பதற்கும் இந்திய மருத்துவச் சங்கத்தின் குஜராத் கிளை சார்பில் உளமார நன்றிகூறுகிறது,” என்று டாடா குழுமத் தலைவர் என்.சந்திரசேகரனுக்கு எழுதிய கடிதத்தில் சங்கம் கூறியுள்ளது.

“அதேபோல, இந்தத் துயரச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கும் நிதியுதவி அளிப்பது பற்றிப் பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்,” என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“பாதிக்கப்பட்ட அந்த மாணவர்கள் நமது சுகாதாரப் பராமரிப்புக் கட்டமைப்பின் வருங்காலத் தூண்கள். அவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் விமானப் பயணிகளுக்குச் சமமான ஆதரவைப் பெறத் தகுதியானவர்கள். அந்த அடிப்படையில், எங்கள் கோரிக்கையைப் பரிசீலித்து அதேபோன்ற உதவியை அறிவிப்பீர்கள் என்று நம்புகிறோம்,” என்று கடிதத்தில் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

இவ்வேளையில், விமான விபத்து விசாரணைக் குழு அதிகாரிகள், அகமதாபாத்திலிருந்து லண்டன் புறப்பட்ட விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தைச் சென்றடைந்துள்ளனர்.

இந்தியாவின் பொது விமானப் போக்குவரத்து அமைச்சின்கீழ் செயல்படும் அந்தக் குழு, இந்தியாவிற்குள் நிகழும் விமான விபத்துகளை விசாரணை செய்யும் பொறுப்பை ஏற்றுள்ளது.

விசாரணையில் உதவ, அமெரிக்காவின் தேசியப் போக்குவரத்துப் பாதுகாப்பு வாரியமும் அதன் விசாரணையாளர் குழுவை இந்தியா அனுப்பத் திட்டமிடுவதாகக் கூறப்பட்டது.

மேலும், விமான விபத்து ஏற்படுவதற்கான காரணங்களைக் கண்டறிந்து, தடுப்பு நடவடிக்கைகளைப் பரிந்துரைப்பதற்காக உயர்நிலைப் பலதுறைக் குழு ஒன்றை இந்திய அரசாங்கம் அமைத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்