புதுடெல்லி: நேப்பாள நாட்டின் இமயமலைப் பகுதியில் அமைந்துள்ள மேல் டோல்பா (Upper Dolpa) பகுதியில், மோசமான வானிலை எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் பயணம் மேற்கொண்ட ஆறு பேரைக் கொண்ட இந்திய மலையேற்றக் குழுவினர் பனிப்பொழிவில் சிக்கித்தவித்து வருகின்றனர்.
இந்தியாவைச் சேர்ந்த நான்கு ஆண்கள், இரு பெண்கள் அடங்கிய அக்குழுவினர், நேப்பாளத்தின் மிக ஆழமான ஷே-ஃபோக்சுண்டோ (Shey-Phoksundo) ஏரியை நோக்கி மலையேற்றப் பயணம் மேற்கொண்டனர். ஏறக்குறைய 3,600 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள அந்த எல்லைப் பகுதிக்குச் செல்லும் வழியில் டேனிகட் என்ற இடத்தில் ஆறு பேரும் பனியில் சிக்கிக்கொண்டனர்.
வங்கக்கடலில் உருவான ‘அர்னாப்’ புயல் காரணமாக இமயமலைப் பகுதிகளில் கனமழை, பனிச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக நேப்பாள வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே எச்சரித்திருந்தது. பாதுகாப்புப் படையினரும் உள்ளூர் வழிகாட்டியும் பயணத்தைத் தொடர வேண்டாம் எனக் கூறியும் அவர்களை மீறி இந்தியக் குழுவினர் அபாயகரமான பாதையில் தனியாகச் சென்றதாகத் தெரிகிறது.
கடும் பனிப்பொழிவால் மலைப் பாதைகள் முற்றிலும் அடைபட்டுள்ளதால், இந்தியக் குழுவினருடனான தொலைபேசித் தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. சுரக்கெட் விமானத் தளத்தில் இருந்த நேப்பாள ராணுவ ஹெலிகாப்டரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் தொடக்கத்தில் மீட்புப் பணிகளில் சற்று தொய்வு ஏற்பட்டது.
தற்போது மாவட்ட நிர்வாகமும் நேப்பாள ராணுவமும் இணைந்து மாற்று ஹெலிகாப்டர் மூலம் பனியில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன.
