இந்தியக் கடற்படை அதிகாரிகள் சிங்கப்பூர் வந்தடைந்துள்ளனர். இந்தியக் கடற்படைக் கப்பல்கள் ஜனவரி 15ஆம் தேதியன்று சாங்கி கடற்படை முகாமை அடைந்தன.
தென்கிழக்கு இந்தியப் பெருங்டல் வட்டாரப் பயிற்சியை முன்னிட்டு இந்தியக் கடற்படை சிங்கப்பூர் வந்துள்ளது.
இவ்வாண்டு ஆசியான் - இந்தியா கடல்துறை ஒத்துழைப்பு ஆண்டாக அனுசரிக்கப்படும் நிலையில், கூட்டுப் பயிற்சி நடைபெறுகிறது.
சிங்கப்பூர் கடற்படை அதிகாரிகளும் இந்தியக் கடற்படை அதிகாரிகளும் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுர்.
அவற்றில் துறைமுக நடவடிக்கை, ஆற்றலையும் கடல்துறை ஒத்துழைப்பையும் மேம்படுத்த இருவழி நிபுணத்துவத் தொடர்பு, கூட்டு யோகா பயிற்சி, விளையாட்டுகள் ஆகியவை அடங்கும்.
கலாசார நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. பொது இடங்களில் இந்தியக் கடற்படை இசைக்குழு நிகழ்ச்சி படைக்கும். அதே சமயத்தில் கடற்படைக் கப்பல்கள் பள்ளிச் சுற்றுப்பயணங்களுக்குத் திறந்துவிடப்படுகிறது.
வெள்ளிக்கிழமையன்று (ஜனவரி 16) ஸ்ரீ நாராயணா மிஷன் முதியோர், தாதிமை இல்லங்களுக்கும் இந்தியக் கடற்படை அதிகாரிகள் சென்றனர்.
இந்தியக் கடற்படைக் கப்பல்களில் தயாரிக்கப்பட்ட உணவுவகைகள் அங்குள்ள முதியோருக்குப் பரிமாறப்பட்டன. முதியோர் சிலருக்கு இந்தியக் கடற்படை அதிகாரிகள் உணவு ஊட்டிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
இந்தியக் கடற்படை அதிகாரிகளின் சிங்கப்பூர் வருகை இருநாடுகளுக்கும் இடையிலான கடல்துறைப் பங்காளித்துவத்தை வலுப்படுத்தும் என்று இந்தியத் தற்காப்பு அமைச்சு கூறியது.

