புதுடெல்லி: அரபிக்கடலில் ஆயுதம் ஏந்திய கடற்கொள்ளையர்களிடம் இருந்து ‘அசினி’ (Azini) என்ற மீன்பிடிப் படகையும் 20 கடலோடிகளையும் இந்திய விமானப் படையின் வான்வழி ஆதரவோடு, இந்தியக் கடற்படை 48 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு வெற்றிகரமாக மீட்டுள்ளது.
மும்பையில் இருந்து ஏறக்குறைய 3,000 கிலோமீட்டர் தொலைவில், நடுக்கடலில் அம்மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கடற்கொள்ளையர்கள் படகைக் கைப்பற்றிய செய்தி கிடைத்தவுடன், இந்திய கடற்படை விரைந்து செயல்பட்டு அப்படகைக் கண்டறிந்து சுற்றி வளைத்தது.
கடற்கொள்ளையர்களை எதிர்கொள்ள இந்தியக் கடற்படை, ஒரு போர்க்கப்பலையும் கண்காணிப்பு விமானத்தையும் களமிறக்கியது. கப்பலின் நகர்வுகள் கண்காணிக்கப்பட்டு, துல்லியமான உத்திகள் மூலம் அதன் இயக்கம் கட்டுப்படுத்தப்பட்டது.
இந்திய விமானப்படையின் சி-17 விமானம் மூலம் கூடுதல் கடற்படை அதிரடிப்படையினர் பாராசூட் வழி கடலில் இறக்கப்பட்டனர்.
கப்பலைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த கடற்படையினர், கொள்ளையர்களின் அச்சுறுத்தலை முறியடித்து அனைத்து ஊழியர்களையும் விடுவித்தனர்.
அதிநவீன ஆயுதங்களுடன் இருந்த கொள்ளையர்களை எதிர்கொண்டு, கடலோடிகள் 20 பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக இந்திய தற்காப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
ஆயுதம் ஏந்திய கொள்ளையர்களிடமிருந்து கப்பலையும் அதன் ஊழியர்களையும் விரைவாகக் கண்டறிந்து மீட்ட செயல், கடல்சார் அச்சுறுத்தல்களுக்கு உடனுக்குடன் தீர்க்கமாகப் பதிலடி கொடுக்கும் இந்தியக் கடற்படையின் தயார்நிலையை வெளிப்படுத்தியுள்ளதாக திரு ராஜ்நாத் சிங் ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.
“உயிர்களைக் காப்பதிலும், கடல்சார் பாதுகாப்பைப் பேணுவதிலும், இந்தியப் பெருங்கடல் வட்டாரத்தில் நிலைத்தன்மையை உறுதிசெய்வதிலும் இந்தியாவின் ஆற்றலையும் உறுதிப்பாட்டையும் இந்தியாவின் துணிச்சல்மிக்க படையினர் மீண்டும் மெய்ப்பித்துள்ளனர்,” என்று அவர் கூறினார்.
அமைதியான கடல் சூழலுக்கும் திறந்த, பாதுகாப்பான இந்தியப் பெருங்கடல் வட்டாரத்திற்கும் இந்தியா தொடர்ந்து கடப்பாடு கொண்டுள்ளது என்றார் அவர்.
எந்தவொரு கடல்சார் அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளவும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் பாதுகாப்பை உறுதிசெய்யவும் இந்திய ஆயுதப் படைகள் எப்போதும் தயார் நிலையில் உள்ளதை இந்நிகழ்வு மீண்டும் மெய்ப்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
