கொச்சி: மால்டா பிரதமர் ராபர்ட் அபேலா தமது நாடாளுமன்ற வரவுசெலவுத் திட்ட உரையின்போது கேரளாவைச் சேர்ந்த ஒரு செவிலியருக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.
மால்டாவின் வளர்ச்சியிலும் மக்கள் நலனிலும் வெளிநாட்டு ஊழியர்களின் பங்கை அவர் பாராட்டினார்.
“என் தாய், தந்தை நோய்வாய்ப்பட்டபோதும், என் மகளுக்குச் சிகிச்சை தேவைப்பட்டபோதும், எங்களுக்கு உதவியாக வந்தவர் ஒரு வெளிநாட்டுச் செவிலியர். அவர் பெயர் கீது. கீது, உங்கள் சேவைக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம், நன்றி,” என்று பிரதமர் ராபர்ட் தமது உரையில் குறிப்பிட்டார்.
35 வயதான கீது லூயிஸ், திருச்சூர் மாவட்டம் சாலக்குடி அருகே உள்ள மேலூரைச் சேர்ந்தவர்.
2018ஆம் ஆண்டு மால்டாவுக்குச் செல்வதற்கு முன்பு, அவர் கேரளாவில் அறுவை சிகிச்சை அரங்கச் செவிலியராகப் பணியாற்றினார்.
கொவிட்-19 பெருந்தொற்று உச்சத்தில் இருந்தபோது, விமான நிலையத்தில் பயணிகளைப் பரிசோதிக்கச் சுகாதாரப் பணியாளர்கள் தேடப்பட்டனர். பலர் தயங்கிய வேளையில், கீது அந்தப் பணியை ஏற்க முன்வந்தார்.
அவரது திறமையையும் துணிச்சலையும் உணர்ந்த அதிகாரிகள், மால்டா முழுவதும் கொவிட்-19 பரிசோதனை நடவடிக்கைகளை வழிநடத்தும் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தனர்.
32 மருத்துவமனை வசதிகளில் 300 சுகாதாரப் பணியாளர்களை கீது நிர்வகித்தார். மால்டா அரசாங்கக் கட்டமைப்பில் மிகவும் மதிக்கப்படும் சுகாதாரப் பணியாளர்களில் ஒருவராக அவர் உயர்ந்தார்.
பிரதமர் ராபர்ட் அபேலாவின் தந்தையான முன்னாள் அதிபர் ஜார்ஜ் அபேலா விபத்தில் காயமடைந்தபோது அவருக்குச் சிகிச்சை அளிக்கும் சிறப்புப் பொறுப்பு கீதுவிடம் வழங்கப்பட்டது.
கீது கிட்டத்தட்ட ஓராண்டு காலம் அபேலா குடும்பத்தினருடன் அதிகாரபூர்வ இல்லத்தில் தங்கியிருந்து சிறப்புச் சிகிச்சை அளித்தார். அதிபருக்கு மட்டுமன்றி, பிரதமரின் மனைவி, மகளுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டபோதும் கீது பெரும் ஆதரவாக இருந்தார்.
கீது தற்போது தனது மகள் தியானா, குடும்பத்தினருடன் மால்டாவில் வசித்து வருகிறார்.
