கன்னியாகுமரி: 2025ஆம் ஆண்டின் இறுதி சூரிய உதயத்தைக் காண உலகின் பல்வேறு இடங்களிலும், குறிப்பாக இந்தியாவின் முக்கிய கடலோரச் சுற்றுலாத் தலங்களிலும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
அனைத்துலகச் சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு நாள்தோறும் ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு விடுமுறை, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கத்தைவிட கூட்டம் அலைமோதும்.
இந்த நிலையில் 2025ஆம் ஆண்டு முடிவடைந்து 2026 ஆங்கிலப் புத்தாண்டு பிறக்க உள்ளது. இதனால் இந்த ஆண்டின் கடைசி நாளான டிசம்பர் 31ஆம் தேதி கன்னியாகுமரியில் அதிகாலையிலேயே சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதியுள்ளது.
இந்தியாவின் தென்கோடி முனையான கன்னியாகுமரியில், முக்கடல் சங்கமிக்கும் இடமான திரிவேணி சங்கமம் கடற்கரையில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் புதன்கிழமை (டிசம்பர் 31) காலை திரண்டு, 2025 ஆம் ஆண்டின் கடைசி சூரிய உதயத்தைக் கண்டு ரசித்தனர்.
அதேபோல், இராமேஸ்வரத்திலுள்ள தனுஷ்கோடி கடற்கரையிலும் அதிகாலை முதலே மக்கள் காத்திருந்து சூரிய உதயத்தை வரவேற்றனர்.
புதுச்சேரி மற்றும் சென்னையின் மெரினா கடற்கரை போன்ற இடங்களிலும் 2025 ஆம் ஆண்டிற்கு விடைகொடுக்கும் வகையில் மக்கள் இந்த நிகழ்வைக் கொண்டாடினர்.
இந்த ஆண்டின் கடைசி சூரிய உதயத்தைப் புகைப்படம், காணொளி எடுத்தும் அதை சமூக ஊடகங்களில் பகிர்ந்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். 2026ஆம் ஆண்டை வரவேற்க உலகம் முழுவதும் தற்போது புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன.
வட இந்தியாவிலும் ஆண்டின் கடைசி சூரிய உதயத்தை (டிசம்பர் 31, 2025) சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். வட மாநிலங்களில் நிலவும் கடும் குளிரையும் மீறி, வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களிலும் மலைப்பிரதேசங்களிலும் மக்கள் திரண்டனர்.
அருணாச்சலப் பிரதேசத்தின் டோங் பள்ளத்தாக்கு இந்தியாவின் முதல் சூரிய ஒளி விழும் இடம். இங்கு 2025ஆம் ஆண்டின் இறுதி சூரிய உதயத்தைக் கொண்டாட முதல்முறையாக 5 நாள் “சூரிய உதயத் திருவிழா” டிசம்பர் 29 முதல் தொடங்கப்பட்டது. சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் அருணாச்சலப் பிரதேச முதல்வர் பெமா காண்டுவுடன் இணைந்து ஆண்டின் கடைசி உதயத்தைக் கண்டு ரசித்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாரணாசியில் உள்ள கங்கை நதிக்கரை படித்துறைகளில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து ஆண்டிறுதி சூரிய உதயத்தைக் கண்டு ரசித்தனர்.
இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லாவில், கடுமையான குளிரையும் பொருட்படுத்தாமல் சிம்லா போன்ற மலைப் பகுதிகளில் இருந்து மலைமுகடுகளுக்குப் பின்னால் இருந்து எழும் சூரியனைக் கண்டு ரசித்தனர்.
உத்தராகண்ட் மாநிலத்தின் ரிஷிகேஷ், ஹரித்துவார் பகுதிகளில் கங்கைக் கரைகளில் கூடிய மக்கள் சூரிய உதயத்தை வரவேற்றனர்.
வட இந்தியாவின் பல பகுதிகளில் நிலவும் அடர்ந்த மூடுபனி காரணமாக சில இடங்களில் சூரிய உதயத்தை முழுமையாகக் காண முடியவில்லை.

