‘ஆஸ்கர் கிளைன்’ பதக்கம் வென்றார் இந்திய இயற்பியலாளர் அசோக் சென்

‘ஆஸ்கர் கிளைன்’ பதக்கம் வென்றார் இந்திய இயற்பியலாளர் அசோக் சென்

படம்: தி இந்து

25 Oct 2026 - 3:52 pm

2 mins read

பெங்களூரு: இந்தியாவின் புகழ்பெற்ற கோட்பாட்டு இயற்பியலாளர் (Theoretical Physicist) அசோக் சென், உலகின் உயரிய விருதான, 2026ஆம் ஆண்டுக்கான ‘ஆஸ்கர் கிளைன் பதக்கத்தைப்’ (Oskar Klein Medal) பெற்று தாய்நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளார். இப்பதக்கத்தைப் பெறும் முதல் இந்திய இயற்பியலாளர் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்துள்ளார்.

பெங்களூரில் உள்ள கோட்பாட்டு அறிவியலுக்கான அனைத்துலக மையத்தின் பேராசிரியரான அசோக் சென், இயற்பியல் துறையில் ‘ஸ்ட்ரிங் தியரி’ (String Theory), ‘எஸ்-டூவாலிட்டி’ (S-duality), கருந்துளைகளின் ‘என்ட்ரோபி’ (Black Hole Entropy) தொடர்பான ஆராய்ச்சிகளில் ஆற்றிய முன்னோடிப் பங்களிப்பிற்காக இந்த விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகம், ராயல் சுவீடிஷ் அறிவியல் அகாடமியின் நோபெல் இயற்பியல் குழு இணைந்து இந்த விருதை வழங்குகின்றன.

விருது வழங்கும் விழா, ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகத்தின் ஆல்பாநோவா மையத்தில் அக்டோபர் 22 அன்று நடைபெற்றது. நிகழ்வில் கலந்துகொண்ட பேராசிரியர் அசோக் சென், சிறப்புச் சொற்பொழிவாற்றினார்.

1988ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த ஆஸ்கர் கிளைன் பதக்கம், இயற்பியல் துறையில் மிகச் சிறந்த பங்களிப்பைச் செய்பவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

சென்-னிங் யாங், ஸ்டீவன் வெயின்பெர்க் போன்ற நோபெல் பரிசு பெற்ற உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானிகள் இப்பதக்கத்தைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, அசோக் சென் 2012ல் ‘பிரேக்த்ரூ’ பரிசையும் (Breakthrough Prize), 2014ல் ‘டிராக்’ பதக்கத்தையும் (Dirac Medal) வென்றுள்ளார்.

மேலும், இந்திய அரசின் பத்மஸ்ரீ (2001), பத்மபூஷண் (2013) விருதுகளையும் பெற்றுள்ள இவருக்கு வாழ்த்துகள் குவிகின்றன.

குறிப்புச் சொற்கள்
பதக்கம்விருதுசாதனைபல்கலைக்கழகம்

தொடர்புடைய செய்திகள்