தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிரிட்டன், மாலத்தீவுக்குச் செல்லும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி

2 mins read
f291c81f-54e2-48ca-aebb-54946a0cc7b3
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பிரிட்டனுக்கும் மாலத்தீவுக்கும் அதிகாரத்துவ பயணம் மேற்கொள்கிறார். - படம்: ராய்ட்டர்ஸ்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இம்மாதம் 23ஆம் தேதியிலிருந்து 26ஆம் தேதி வரை பிரிட்டனுக்கும் மாலத்தீவுக்கும் அதிகாரத்துவ பயணம் மேற்கொள்வதாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அப்போது இந்தியாவும் பிரிட்டனும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் அதிகாரபூர்வமாகக் கையெழுத்திடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாலத்தீவின் சுதந்திரத் தினக் கொண்டாட்டத்தில் திரு மோடி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளவிருக்கிறார்.

இருநாடுகளிலும் ஏற்பட்ட தலைமைத்துவ மாற்றங்களுக்குப் பிறகு திரு மோடி அங்கு மேற்கொள்ளும் முதல் அதிகாரபூர்வ பயணம் இது.

“பிரிட்டி‌ஷ் பிரதமர் கியர் ஸ்டார்மரின் அழைப்பை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 23ஆம் தேதியிலிருந்து 24ஆம் தேதி வரை பிரிட்டன் செல்கிறார்,” என்று இந்திய வெளியுறவு அமைச்சு அறிக்கை வெளியிட்டது.

பயணத்தின்போது இந்திய-பிரிட்டன் இருதரப்பு உறவுகள் பற்றிய பல்வேறு விவகாரங்கள் பற்றி தலைவர்கள் கலந்துரையாடுவர் என்ற அமைச்சு, வட்டார ரீதியிலும் அனைத்துலக அளவில் உள்ள முக்கிய பிரச்சினைகள் பற்றிய கருத்துகளைப் பரிமாறிக்கொள்வர் என்றும் குறிப்பிட்டது.

வர்த்தகம், பொருளாதாரம், தொழில்நுட்பம், புத்தாக்கம், தற்காப்பு, பாதுகாப்பு, பருவநிலை மாற்றம், சுகாதாரம், கல்வி, மக்களுக்கு இடையிலான உறவு போன்றவற்றில் கவனம் செலுத்தும் விரிவான உத்திபூர்வ பங்காளித்துவம் பற்றியும் திரு மோடியும் திரு ஸ்டார்மரும் பேசவிருக்கின்றனர்.

இந்திய-பிரிட்டன் தடையற்ற வர்த்தக உடன்பாடு இவ்வாண்டு மே மாதத்தில் உறுதிசெய்யப்பட்டாலும் திரு மோடியின் வருகையின்போது அது கையெழுத்தாகவிருக்கிறது.

மூவாண்டு பேச்சுவார்த்தைக்குப் பின் செய்துகொள்ளப்படும் உடன்பாடு, வரிகளிலிருந்து 99 விழுக்காட்டு இந்திய ஏற்றுமதிகள் பயனடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்த வர்த்தகத்தை மேம்படுத்துவதையும் தாண்டி விஸ்கி, கார்கள் போன்ற பொருள்களை இந்தியாவுக்குப் பிரிட்டனால் எளிமையாக ஏற்றுமதி செய்ய முடியும்.

2023ஆம் ஆண்டு நவம்பரில் மாலத்தீவு அதிபராக திரு முகமது முய்ஸு பதவியேற்றதை அடுத்து திரு மோடி முதன்முறையாக அங்குச் செல்கிறார்.

ஜூலை 26ஆம் தேதி நடைபெறும் மாலத்தீவின் 60ஆம் சுதந்திரத் தினக் கொண்டாட்டத்தில் திரு மோடி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார்.

குறிப்புச் சொற்கள்