புதுடெல்லி: இந்திய ரயில்வே, தனது வாடிக்கையாளர்களின் வசதியை மேம்படுத்தும் வகையில், வீடுகளுக்கே நேரடியாகச் சென்று பொதி (பார்சல்) அஞ்சல்களைப் பெற்று, கொண்டு சேர்க்கும் சேவையைத் தொடங்கியுள்ளது.
இதற்காக, ‘வீடு முதல் வீடு வரை’ (கர் சே கர் தக்) எனும் புதிய கைப்பேசிச் செயலி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
முதற்கட்டமாக சென்னை, டெல்லி, மும்பை, கோல்கத்தா, அகமதாபாத், ஹைதராபாத், பெங்களூரு, புனே ஆகிய எட்டு முக்கியமான நகரங்களில் இச்சேவை தொடங்கப்பட உள்ளது என்றும் இதன்மூலம் வாடிக்கையாளர்கள் ரயில்வே நிலையங்களுக்கு நேரடியாகச் செல்லாமலும் நீண்ட படிவங்களை நிரப்பாமலும் இணையம் மூலமாகவே பொதி அனுப்பும் சேவையைப் பெற முடியும் என்றும் இந்திய ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளர்கள் தங்களது கைப்பேசி எண் மூலம் கணக்கு தொடங்கி, செயலி அல்லது இணையத்தளம் வழியாகப் பொதிச் சேவையைப் பதிவு செய்து மின்னலக்க முறையில் கட்டணம் செலுத்தலாம்.
ரயில்வேயுடன் இணைந்து செயல்படும் தளவாடச் சேவை பங்காளிகள் மூலம் வீடுகளில் இருந்தே பொதிகளைப் பெற்று, அவை செல்ல வேண்டிய இடங்களுக்குக் கொண்டுசேர்க்கப்படும்.
பொதி அனுப்பப்பட்டது முதல், அது உரிய முகவரியைச் சென்றடையும் வரை செயலி மூலம் நிகழ்நேரத்தில் கண்காணிக்கும் வசதியும் தானியங்கி அறிவிப்புகளும் வழங்கப்படும்.
ரயில் புறப்படுவதற்கு 15 நாள்களுக்கு முன்பிருந்து, குறைந்தபட்சம் ஒரு நாள் முன்பு வரை இடவசதியைப் பொறுத்து இச்சேவைக்கு முன்பதிவு செய்யலாம். ரயில் புறப்படுவதற்கு 12 மணி நேரத்திற்கு முன்பிலிருந்து ஒரு மணி நேரத்திற்குள் ரயில்வே ஊழியர்களிடம் பொதியை ஒப்படைக்க வேண்டும்.
அபாயகரமான, தடை செய்யப்பட்ட பொருள்களை அனுப்ப அனுமதி இல்லை. பொதுமக்களுக்கு வேகமான, பாதுகாப்பான, எளிமையான சேவையை வழங்குவதே இந்த புதிய முயற்சியின் நோக்கம் என ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
