புதுடெல்லி: இந்தியாவில் ரயில் போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும் ரயில்களின் வேகத்தைக் கணிசமாக அதிகரிக்கும் நோக்கிலும் இந்திய ரயில்வே புதிய திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
நாட்டின் மிக முக்கியமான ஏழு வழித்தடங்களில் உள்ள 11,000 கிலோமீட்டர் நீளமுள்ள தண்டவாளங்களை நான்கு வழிப்பாதைகளாக மாற்றுவதே அந்தத் திட்டமாகும்.
தற்போது இந்தியாவில் உள்ள மொத்த ரயில் பாதைகளில் ஏழு வழித்தடங்கள் மட்டுமே, 16 விழுக்காடு பங்களிப்புடன் முக்கியமான பாதைகளாக விளங்குகின்றன.
நாட்டின் ஒட்டுமொத்த ரயில் போக்குவரத்தில் 41 விழக்காடுக்கும் அதிகமான பயணிகள், சரக்கு ரயில்கள் இந்தப் பாதைகளில்தான் இயக்கப்படுகின்றன.
இதன் காரணமாகவே ரயில்கள் அடிக்கடி ‘சிக்ன’லுக்காகத் காத்து நிற்கும் சூழலும் பயணநேரம் அதிகரிப்பதும் தொடர்கதையாகிவிட்டன.
எனவே, டெல்லி-ஹவுரா, சென்னை-ஹவுரா, சென்னை-மும்பை, மும்பை-டெல்லி, டெல்லி-சென்னை, மும்பை-ஹவுரா, டெல்லி-கவுகாத்தி ஆகிய அந்த ஏழு முக்கியமான வழித்தடங்கள் மாற்றப்பட உள்ளன.
சரக்கு போக்குவரத்தைச் சாலை வழியிலிருந்து ரயில்வேக்கு மாற்றுவது நாட்டின் பொருளியல் வளர்ச்சிக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் மிகவும் அவசியம் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
தண்டவாளங்கள் நான்கு வழிப்பாதைகளாக மாறும்போது, சரக்கு ரயில்களும் பயணிகள் ரயில்களும் தனித்தனி பாதைகளில் தடையின்றி இயங்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தடையற்ற ரயில் இயக்கத்தால் ரயில்களின் சராசரி வேகம் அதிகரித்து, பயண நேரம் பெருமளவில் குறையும் என்றும் பண்டிகை காலங்கள், அன்றாடப் பயணங்களுக்காக அதிக எண்ணிக்கையிலான புதிய ரயில்களை இயக்க வழிவகுக்கும் என்றும் திரு அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.


