புதுடெல்லி: ரயில் பயணிகளின் புகார்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணும் வகையில் இந்திய ரயில்வேயின் ‘ரயில்மதத்’ (RailMadad) செயலியில் பல்வேறு முக்கியத் தொழில்நுட்ப மாற்றங்கள் செய்யப்படவுள்ளன.
புகார்களைச் சரியாக வகைப்படுத்துதல், உரிய அதிகாரிகளுக்கு விரைவாகத் திருப்பிவிடுதல், அவற்றைக் கண்காணித்தல் ஆகிய நடைமுறைகள் மேம்படுத்தப்படுகின்றன.
புதிய மாற்றங்களின்படி, ரயில்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டால், இறுதியாகத் தண்ணீர் நிரப்பப்பட்ட நிலையத்தின் கணக்கில் கொண்டு வரப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
வந்தே பாரத் ரயில்களின் உணவுக் கழிவுப் புகார்கள் இனி நேரடியாக ‘ஐஆர்சிடிசி’ நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.
ரயில்களில் படுக்கை உறைகளை வழங்கும் ஊழியர்கள், ‘கோச் மித்ரா’ ஊழியர்களின் எண்களும் இச்செயலியில் இணைக்கப்படவுள்ளன. துப்புரவு ஊழியர்கள் இல்லாத ரயில்கள், தவறான பிரிவில் பதிவிடப்படும் புகார்கள் ஆகியவற்றைச் சரியான அதிகாரிகளுக்கு அனுப்பும் புதிய முறையும் அறிமுகமாகிறது.
ஒரே பிஎன்ஆர் (PNR) எண் அல்லது சாதனத்தைப் பயன்படுத்தி குறுகிய காலத்தில் ஒரே மாதிரியான பல புகார்களைத் திரும்பத் திரும்பப் பதிவிடுவதைத் தடுக்கத் தொழில்நுட்பக் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படும்.
புறப்படும் நேரம் மாற்றப்பட்ட ரயில்களில், ரயில் தொடக்க நிலையத்திலிருந்து புறப்படுவதற்கு முன்பாகவே பயணிகள் புகார் பதிவிடுவதும் தடுக்கப்படும்.
தவறான பிரிவில் பதிவிடப்படும் புகார்களைச் சரியான பிரிவிற்கு மாற்றும் வசதியும், புகார்களை அதிகாரிகள் எளிதில் கண்காணிக்க புதிய டேஷ்போர்டு வசதியும் அறிமுகமாகின்றன. இம்மாற்றங்கள் அனைத்தும் பயணிகள் சேவை அனுபவத்தை மேலும் விரைவாகவும் எளிதாகவும் மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

