அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 23) 0.52% சரிந்து 88.7925 எனும் நிலையைத் தொட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்கு முந்தைய 88.4550 என்ற சரிவைவிட இது அதிகம்.
அமெரிக்கா, எச்1பி விசா கட்டணத்தை உயர்த்தியதை அடுத்து அழுத்தம் மோசமாகி, ஏற்கெனவே பலவீனமான நாணயத்திற்கான எதிர்கால வாய்ப்பு மோசமடைந்து, இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவிற்கு குறைந்தது.
அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் அரசின் H-1B விசா கட்டண உயர்வு ரூபாய் மதிப்புச் சரிவுக்கு முக்கியக் காரணமாகும். இது. இந்திய ஊழியர்கள் அமெரிக்கா செல்வதை மெதுவடையச் செய்வதுடன் இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறையின் லாபத்தை பாதிக்கும் எனவும் கூறப்படுகிறது.
எச்1பி விசா இந்திய தொழில்நுட்பத் துறையை அதிகம் சார்ந்துள்ளது என்பதால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் உள்ள தங்கள் பங்குகளை மறுஆய்வு செய்கின்றனர். ரூபாய் மதிப்பின் வீழ்ச்சிக்கு வெளிநாட்டுப் பங்கு முதலீடுகளின் வெளியேற்றமும் முக்கியமான காரணம்.
இந்திய தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சி பாதிக்கப்படலாம் என்பதால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இத்தகைய முடிவை எடுத்துள்ளதாகக் கணிப்பாளர்கள் கூறுகின்றனர்.
எனினும், இந்தச் சரிவு மத்திய வங்கியால் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. மத்திய வங்கியின் தலையீடு இல்லாமல் இருந்திருந்தால் வீழ்ச்சி இன்னும் கடுமையாக இருந்திருக்கும் என்று வணிகர்கள் கூறுகின்றனர்.
இந்த ஆண்டில் இதுவரை, ரூபாயின் மதிப்பு கிட்டத்தட்ட 3.5% சரிந்துள்ளது. இதனால் இந்த ஆண்டில் மிக மோசமான செயல்பாட்டு நாணயமாக ரூபாய் மாறியுள்ளது. எனினும், அமெரிக்காவின் வரி அதிகமாக இருந்த போதிலும் இந்தியாவின் மத்திய வங்கி ஏற்றுமதியைப் போட்டித்தன்மையுடன் வைத்திருக்க இந்தப் பலவீனம் உதவுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.