இரண்டாவது முறையாகப் படுவீழ்ச்சியடைந்த இந்திய ரூபாய்

இரண்டாவது முறையாகப் படுவீழ்ச்சியடைந்த இந்திய ரூபாய்

1 mins read
51b315eb-f87a-4d4d-8815-9cc787649713
இந்திய ரூபாயின் மதிப்பு ஒரு டாலருக்கு 94.29ஆக வீழ்ச்சியடைந்தது. - படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: இந்திய ரூபாய் மதிப்பு இரண்டாவது முறையாகக் கடுமையான வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளது.

ஒரு டாலருக்கு 94.29 ரூபாயாக இந்திய ரூபாயின் மதிப்புப் பங்குச் சந்தையில் பதிவானது. அதையடுத்து, பங்குச் சந்தைகளில் போடப்பட்ட மொத்த முதலீட்டில் ஒரு மணிநேரத்துக்குள் 7 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

பங்குச் சந்தையில் உள்ளூர்ப் பங்குகள் புதன்கிழமை பதிவானதைவிட 18 பைசா குறைவாக முடிந்தது. சென்செக்ஸ் குறியீடு 1,000 புள்ளிகளுக்கும்மேல் சரிந்தது.

ஈரானில் தொடரும் போரால் எண்ணெய் சரக்குக் கப்பல்கள் செல்லும் முக்கிய பாதைகள் முடக்கப்பட்டன. அதன் விளைவாக கச்சா எண்ணெய் விலைகள் கணிசமாக அதிகரித்தன.

கிட்டத்தட்ட 80 விழுக்காட்டு எண்ணெய்யை இறக்குமதி செய்யும் இந்தியா, கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்பால் விலைவாசி உயரும் என்று அஞ்சுகிறது.

எண்ணெய் விலை அதிகமானால் அதை இறக்குமதி செய்ய இந்தியா கூடுதல் கட்டணம் செலுத்தவேண்டியிருக்கும்.

எனவே, அதிகரிக்கும் எண்ணெய் விலை, சரிந்துள்ள ரூபாய் மதிப்பு ஆகிய இரண்டு சிக்கல்களையும் சமாளிக்கும் நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.

அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான்மீது தாக்குதல் நடத்தியதிலிருந்து இந்திய ரூபாயின் மதிப்பு கிட்டத்தட்ட 3.5 விழுக்காடு சரிந்துள்ளது.

மேலும், அதிகரிக்கும் எரிசக்தி விலையாலும் அனைத்துலக அபாயங்களாலும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வளரும் சந்தைகளிலிருந்து முதலீடுகளைத் திரும்ப பெறுகின்றனர்.

அனைத்துலக அளவில் நிலவும் நிச்சயமற்ற சூழல் இந்தியாவின் சொத்துகள்மீது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

குறிப்புச் சொற்கள்