தொடர்ந்து சரிந்துவரும் இந்திய ரூபாயின் மதிப்பு

2 mins read
5ff1e95a-32d8-48a1-b4a3-3837bdca0030
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு விரைவில் 92 ரூபாயை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. - படம்: பிஸ்னஸ் டுடே

புதுடெல்லி: இந்திய ரூபாயின் மதிப்பு வெள்ளிக்கிழமை (ஜனவரி 23) மேலும் கீழிறங்கி, அமெரிக்க டாலருக்கு நிகரான மதிப்பில் இதுவரை இல்லாத அளவு சரிவைச் சந்தித்தது.

ஓர் அமெரிக்க டாலருக்கு 91.9650 ரூபாய் என்ற நிலையைத் தொட்ட நிலையில், நாளின் முடிவில் ஒரு டாலருக்கு 91.94 ரூபாய் என்ற அளவில் முடிந்தது. இது முந்திய நாளான வியாழக்கிழமையைக் காட்டிலும் 0.3 விழுக்காடு குறைவு.

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு கடந்த வாரத்தில் மட்டும் 1.18 விழுக்காடும் நடப்பு ஜனவரி மாதத்தில் 2.3 விழுக்காடும் கீழிறங்கியது.

கிரீன்லாந்தைத் தன்வசப்படுத்தப் போவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப மிரட்டல் விடுத்ததை அடுத்து, அமெரிக்க டாலரின் மதிப்பு சற்று கீழிறங்கியது. பின்னர் அவர் தமது அறிவிப்பிலிருந்து பின்வாங்கினார். இதனையடுத்து, டாலருக்கு நிகரான மற்ற ஆசிய நாணயங்களின் மதிப்பு சற்று மேலேறியது. ஆனால், இந்திய ரூபாயின் மதிப்பு மட்டும் தொடர்ந்து வீழ்ச்சி கண்டுவருவது கவலைக்குரியதாகப் பார்க்கப்படுகிறது.

“கடந்த 2025ஆம் ஆண்டில் பெரும்பாலும் நாம் பார்த்த நிலையையே இப்போதும் காண்கிறோம். இந்திய ரூபாய் தொடர்ந்து நெருக்கடியைச் சந்தித்து வருகிறது,” என்று மெக்லாய் நிதிச் சேவைகள் நிறுவனத்தின் துணைத் தலைவர் சோனல் குல்கர்னி கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி தெரிவிக்கிறது.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து முதலீடுகளை மீட்டுக்கொள்வதும் இறக்குமதியாளர்களும் பெருநிறுவனங்களும் இழப்புக்காப்பு வணிக (hedging) நடைமுறையைப் பின்பற்றுவதும் இம்மாதத்தில் ரூபாய் மதிப்பு சீராக இறக்கம் கண்டதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது.

ஏற்றுமதியாளர்களும் டாலர் விற்பனையைக் குறைத்துக்கொண்டதால் சந்தையில் டாலர் பரிமாற்றம் குறைந்து, இந்திய ரூபாய்மீது மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்திய ரிசர்வ் வங்கியின் அவ்வப்போது தலையீடு இழப்பைச் சற்றுக் குறைக்க உதவியது. ஆயினும், ரூபாய் மதிப்பின் சரிவை அதனால் தடுக்க முடியவில்லை. இவ்வாரத்தில் மட்டும் ரிசர்வ் வங்கி குறைந்தது இருமுறை அமெரிக்க டாலர் விற்பனையில் ஈடுபட்டதாக வங்கியாளர்கள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்