மும்பை: கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு பெரும் சரிவைச் சந்தித்துள்ளது.
வியாழக்கிழமை வணிக நேர முடிவில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 95.52 ஆகச் சரிந்தது. தொடர்ந்து வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 11) வெள்ளிக்கிழமை) ரூபாயின் மதிப்பு மேலும் குறைந்து 95.79 ஆக வீழ்ச்சி அடைந்தது. கடந்த இரு வாரங்களில் பதிவான மிகக் குறைந்த அளவு இதுவாகும்.
ரூபாயின் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்தவும், சந்தையில் நிலவும் டாலர் தேவையைச் சமாளிக்கவும் இந்திய மத்திய வங்கி (RBI) நேரடியாகத் தலையிட்டு டாலர்களை விற்பனை செய்து வருவதாக வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், வங்கி அமைப்பில் உள்ள அதிகப்படியான ரூபாய் புழக்கத்தைக் குறைக்கச் சிறப்பு நடவடிக்கைகளையும் மத்திய வங்கி மேற்கொண்டு வருகிறது.
அமெரிக்கா - ஈரான் இடையேயான மோதலால் முக்கியக் கடல்வழிப் பாதைகளான ஹோர்முஸ், பாப் எல்-மண்டேப் நீரிணைகளில் வணிகத் தடங்கல்கள் ஏற்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இதனால் உலகச் சந்தையில் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை திடீரென உயர்ந்து, பீப்பாய் ஒன்றுக்கு 108.62 டாலரை எட்டியுள்ளது.இந்தியாவில் கச்சா எண்ணெய் தேவைக்காக இறக்குமதியை அதிகம் சார்ந்து இருப்பதால், எண்ணெய் விலை உயர்வு இந்தியாவின் இறக்குமதிச் செலவை அதிகரித்து, வணிகப் பற்றாக்குறையை உருவாக்குகிறது. இது அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பைக் குறைப்பதோடு, நாட்டில் மீண்டும் பணவீக்கம் அதிகரிக்க வழிவகுக்கிறது.
அமெரிக்கப் பங்குகளில் முதலீட்டாளர்களின் அதிக ஆர்வம், வெளிநாட்டு முதலீடுகளின் வெளியேற்றம், அமெரிக்கப் பணவீக்கத் தரவுகள் காரணமாக டாலரின் மதிப்பு பலமடைந்துள்ளது.
போர் ஆபத்து நிலவும் காலங்களில் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் வளரும் நாடுகளின் பங்குச்சந்தைகளில் உள்ள தங்களின் பணத்தை எடுத்து, பாதுகாப்பான முதலீடுகளான தங்கம், அமெரிக்க அரசுப் பத்திரங்களை நோக்கித் தங்களின் நிதியை நகர்த்துகின்றனர்.
ஐரோப்பிய மத்திய வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தியிருப்பதும், வளர்ந்து வரும் சந்தை நாடுகளின் நாணயங்கள் மீது கூடுதல் அழுத்தத்தை உருவாக்கியுள்ளது.
இந்தியப் பங்குச்சந்தையும் வெள்ளிக்கிழமை மீண்டும் பெரும் சரிவைச் சந்தித்தது. மும்பைப் பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ், தேசியப் பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி ஆகிய இரண்டும் பல நூறு புள்ளிகள் சரிந்து வணிகமாகின.
இந்நிலை தொடர்ந்தால் இந்தியப் பொருளியலில் பணவீக்கம் மேலும் அதிகரிக்கும் எனப் பொருளியல் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
மத்திய கிழக்கின் பதற்றமான சூழ்நிலை தணியும்வரை இந்திய ரூபாய், இந்தியப் பங்குச்சந்தைகளில் இந்தத் தாக்கம் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

