தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மூன்றாண்டுகளில் இந்திய செயற்கைக்கோள் எண்ணிக்கை மும்மடங்காகும்: இஸ்ரோ

2 mins read
d3c3627c-7d51-4fc2-bf7f-f6e588f16eaa
இஸ்ரோ தலைவர் நாராயணன். - படம்: ஊடகம்

திருச்சி: விண்ணில் தற்போது 55 இந்திய செயற்கைக்கோள்கள் உள்ள நிலையில் அடுத்த மூன்று ஆண்டுகளில் அவற்றை மும்மடங்காக உயர்த்தத் திட்டமிடப்பட்டு உள்ளதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த ஆண்டு 34 விதமான புதிய தொழில்நுட்பங்கள் கொண்ட செயற்கைக்கோள்களுடன் 12 உந்துகணைகளும் (ராக்கெட்) விண்ணில் ஏவப்பட உள்ளதாகக் குறிப்பிட்டார்.

“அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனத்தின் தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் ஒன்றும் இங்கிருந்து ஏவப்படுகிறது. பிரதமர் ஒதுக்கீடு செய்த 20,000 கோடி ரூபாயில் ககன்யான் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறோம். ககன்யான் திட்டம் மூலம் இந்தியாவில் தயாரித்த ‘ககன்யான் ஜி1’ என்ற செயற்கைக்கோளில் இயந்திர மனிதனை வைத்து வரும் டிசம்பரில் அனுப்பத் திட்டமிட்டுள்ளோம்.

“சிந்தூர் நடவடிக்கைக்குப் பின், இந்திய மக்களின் பாதுகாப்புத் தேவை அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறோம். அந்த நடவடிக்கையின்போது இந்திய செயற்கைக்கோள்கள் துல்லியமான தகவல்களை அளித்தன,” என்றார் திரு நாராயணன்.

இஸ்ரோ மற்றும் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையமும் இணைந்து அனுப்பும், ‘நிசார்’ செயற்கைக்கோள், வரும் 30ஆம் தேதி ஜிஎஸ்எல்வி-எப் 16 ராக்கெட் வாயிலாக விண்ணில் ஏவப்பட உள்ளது.

தற்போது, விண்வெளி சுற்றுப்பாதையில் இந்தியாவின் 55 செயற்கைக்கோள்கள் பயன்பாட்டில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அடுத்த மூன்று ஆண்டுகளில், இந்த எண்ணிக்கையை மும்முடங்காக உயர்த்தும் பணியில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

ஹைதராபாத்தில் நடைபெற்ற கருத்தரங்கில், ‘இந்திய விண்வெளித் திட்டத்தின் சாதனைகள், சவால்கள் மற்றும் எதிர்காலக் கண்ணோட்டங்கள்’ என்ற தலைப்பில் பேசிய நாராயணன், விண்வெளித் துறையில் இந்தியாவின் தேவை மிகப்பெரியது என்றார்.

“தேவை அதிகமாக இருப்பதால், அதிகமான செயற்கைக்கோள்களை உருவாக்கி, அவற்றை விண்வெளிக்கு அனுப்பும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.வரும் 2035ல், இந்தியாவும் அனைத்துலக விண்வெளி நிலையத்தை உருவாக்கும்.

“சந்திரயான் - 3 வெற்றிக்குப் பின், இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற ஜப்பான் விரும்பியது. இதன் விளைவாக, ஜப்பானிய விண்வெளி நிறுவனமான ஜாக்சாவும், ‘சந்திரயான் 5’ பணியை நோக்கிச் செயல்பட முடிவு செய்துள்ளது. இருதரப்பும் இணைந்து செயற்கைக்கோள்களை உருவாக்கி வருகிறோம்,” என்றார் நாராயணன்.

இந்திய ராக்கெட்டுகளை பயன்படுத்தி, விண்வெளி தொழில்நுட்பம் இல்லாத 34 நாடுகளைச் சேர்ந்த 433 செயற்கைக்கோள்களை இஸ்ரோ விண்வெளிக்கு அனுப்பியுள்ளதாகவும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்