புதுடெல்லி: ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர் ஒருவர் புதிய விண்கல்லைக் கண்டுபிடித்துள்ளார்.
இதற்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில், அந்த புதிய விண்கல்லுக்கு நிரந்தரப் பெயர் சூட்ட தாஷ் மாலிக் என்ற அந்த மாணவருக்கு அமெரிக்க விண்வெளி ஆய்வுக்கழகமான நாசா அழைப்பு விடுத்துள்ளது.
புதுடெல்லி அருகே நொய்டா பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் படிக்கும் மாலிக், கடந்த 2022ஆம் ஆண்டு நாசாவின் அனைத்துலக விண்வெளி திட்டத்தில் இணைந்தார். பின்னர் ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகள் மேற்கொண்ட தீவிர ஆய்வுக்குப் பின்னர் புதிய விண்கல்லைக் கண்டுபிடித்துள்ளார்.
“இந்த விண்கல்லை தற்போது ‘202340’ என்று குறிப்பிடுகிறோம். எனவே, நாசா இதற்கு நிரந்தரப் பெயர் சூட்ட விரும்புகிறது. அதற்கான வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டுள்ளது. சில பெயர்களை மனதில் குறித்து வைத்துள்ளேன். அவற்றுள் ஒரு பெயரை விண்கல்லுக்குச் சூட்டுவேன்,” என்று மாணவர் மாலிக் தெரிவித்துள்ளார்.


