தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மேற்படிப்பைத் தொடர அமெரிக்காவைப் புறக்கணிக்கும் இந்திய மாணவர்கள்

2 mins read
c4dfcff7-d498-4a49-af16-26eb46a4509c
அமெரிக்காவுக்குப் படிக்க செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், 28 விழுக்காடு குறைந்துள்ளது. - படம்: இந்திய ஊடகம்

வாஷிங்டன்: அமெரிக்காவுக்குப் படிக்கச் செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் சரிந்து வருகிறது.

அமெரிக்க அதிபராக, கடந்த ஜனவரியில் டோனல்ட் டிரம்ப் பதவியேற்றார். விசா நடைமுறைகளில் கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தார். அமெரிக்க மக்களுக்கே முன்னுரிமை என்ற வகையில், பல அதிரடி அறிவிப்புகளை அவர் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

இதற்கிடையே தற்போது பல நாடுகளுடன் பரஸ்பர வரிப் போரை டிரம்ப் நடத்தி வருகிறார். பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்கள் வெளிநாட்டு விவகாரங்களில் கருத்து தெரிவித்தால், உடனடியாகத் தானாக வெளியேறும்படி உத்தரவிடப்படுகிறது.

இதுபோன்ற காரணங்களால், அமெரிக்காவுக்குப் படிக்கச் செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கடந்த நிதியாண்டில், முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்திய மாணவர்கள் எண்ணிக்கை 28 விழுக்காடு குறைந்துள்ளது.

அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு, எப் 1 மற்றும் எம் 1 விசாக்கள் வழங்கப்படுகின்றன. அமெரிக்க அரசின் புள்ளி விவரங்களின்படி, கடந்தாண்டு ஜூலையில், 3 லட்சத்து 48 ஆயிரத்து 446 மாணவர்கள் படித்து வந்தனர். இதுவே ஆகஸ்ட் மாதத்தில் 2 லட்சத்து 55 ஆயிரத்து 447ஆக குறைந்தது.

வழக்கமாக ஆகஸ்ட் மாதத்தில் தான், புதிய மாணவர் சேர்க்கை நடைபெறும். கடந்த காலங்களில் இந்திய மாணவர் சேர்க்கை அதிகமாக இருந்த நிலையில், தற்போது அதில் பெரும் சரிவு காணப்படுகிறது.

மாற்று நேர்முக பயிற்சி திட்டத்தின் கீழ், வெளிநாட்டு மாணவர்கள் படிப்பை முடித்ததும், மூன்று ஆண்டுகள் அமெரிக்காவில் தங்கி கூடுதல் பயிற்சி மேற்கொள்ள வாய்ப்பு தரப்பட்டது. தற்போது, இந்தத் திட்டத்தை ரத்து செய்யும் வகையிலான மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஒரு பக்கம் விசா கட்டுப்பாடுகள், மறுபக்கம் கல்விக் கட்டணம் உயர்வு ஆகியவற்றுடன், டிரம்ப் நிர்வாகத்தின் செயல்பாடுகள், அமெரிக்காவுக்குக் கல்வி பயிலச் செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை குறைவதற்கு முக்கிய காரணமாக அமைகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

குறிப்புச் சொற்கள்