ஹைதராபாத்: கல்வி அனுமதிச்சீட்டு, விசா, மதிப்பெண்களையும் வருகைப்பதிவையும் கொண்ட பள்ளிப் பதிவேடுகள் போன்ற முக்கிய ஆவணங்களை மீண்டும் சமர்ப்பிக்குமாறு கனடாவில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கு மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
வெளிநாட்டு மாணவர்களைக் கையாளும் அரசாங்கப் பிரிவான கனேடிய குடிநுழைவு, அகதிகள், குடியுரிமை (ஐஆர்சிசி), இவ்வாறு கோரியுள்ளதாகவும் இதனால் அனைத்துலக மாணவர்களிடையே பதற்றம் நிலவிவருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த மாணவர்கள் பலரிடம் ஈராண்டு வரை செல்லுபடியாகும் விசாக்கள் உள்ளதாக அறியப்படுகிறது.
அனைத்துலக மாணவர்கள் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஐஆர்சிசி அதன் கொள்கைகளை இறுக்கி வருகிறது. நிதி தொடர்பாக மேலும் கடுமையான நிபந்தனைகளை அறிமுகப்படுத்தியதுடன் மாணவர் சேர்க்கையில் ஒரு வரம்பை விதிக்கும் யோசனையையும் அது பரிசீலித்து வருகிறது.
இதற்கிடையே, இந்த மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டுள்ளன.
“அந்த மின்னஞ்சலைப் பார்த்தபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. எனது விசா 2026ஆம் ஆண்டு வரை செல்லுபடியாகும். இருப்பினும், என்னுடைய ஆவணங்கள் அனைத்தையும் மீண்டும் சமர்ப்பிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது,” என்று பிரிட்டிஷ் கொலம்பியாவில் பயிலும் அவினாஷ் கௌஷிக் கூறினார்.
கடந்த வாரம் இதே போன்ற மின்னஞ்சல்கள் பஞ்சாப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு அனுப்பப்பட்டதாக அறியப்படுகிறது. ஒருசிலர் தங்களது நற்சான்றிதழை உறுதிப்படுத்த நேரடியாக ஐஆர்சிசி அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டும் என்றும் கோரப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அண்மைய ஆண்டுகளாக கனடாவில் அனைத்துலக மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. அதில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகப்படியாக இருந்து வருகிறது. வெளியுறவு அமைச்சு வெளியிட்ட தகவலின்படி, உலகிலேயே ஆக அதிகமான இந்திய மாணவர்களைக் கனடா கொண்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. அங்கு மொத்தம் 420,000 இந்திய மாணவர்கள் படித்துவருவதாகக் கூறப்படுகிறது.


