புதுடெல்லி: இந்தியத் துணை அதிபருக்கான தேர்தல் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
துணை அதிபராக இருந்த ஜக்தீப் தன்கர் கடந்த ஜூலை 21ஆம் தேதி திடீரென பதவி விலகினார். அவரது பதவிக்காலம் 2027 ஆகஸ்ட் 10ஆம் தேதி முடிவடைவதாக இருந்தது.
மத்திய அரசுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடே அவரது திடீர் பதவி விலகலுக்கான காரணமாகச் சொல்லப்படுகிறது.
இதனையடுத்து, அடுத்த துணை அதிபர் யார் என்பது குறித்து மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த ஒருவரே அப்பதவியில் நியமிக்கப்படலாம் என்ற நிலையில், அப்பதவியைப் பிடிக்க அக்கூட்டணியில் கடுமையான போட்டி நிலவுவதாகச் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், துணை அதிபர் தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி, துணை அதிபர் தேர்தலுக்கான அறிவிப்பு ஆகஸ்ட் 7ஆம் தேதி வெளியாகும். அன்றுமுதலே வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்புமனு தாக்கலுக்கான இறுதிநாள் ஆகஸ்ட் 21. வாக்குப்பதிவு நாளான செப்டம்பர் 9ஆம் தேதியே முடிவுகளும் அறிவிக்கப்படவுள்ளன.
நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்குகொள்ளும் ரகசிய வாக்கெடுப்புமூலம் துணை அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவார். நியமன நாடாளுமன்ற உறுப்பினர்களும் அத்தேர்தலில் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர்.

