புதுடெல்லி: சுற்றுலாத் துறையையும் மக்கள் தொடர்பையும் ஊக்குவிக்கும் வகையில், விசாவின்றி இந்தியச் சுற்றுப்பயணிகளைத் தன் நாட்டிற்குள் அனுமதிக்க பிலிப்பீன்ஸ் முடிவுசெய்துள்ளது.
அதே நேரத்தில், பிலிப்பீன்ஸ் சுற்றுப்பயணிகளுக்கும் இலவச இ-விசா சேவையை இந்தியா நீட்டிக்கவிருக்கிறது.
அத்துடன், இருநாடுகளுக்கு இடையிலான தொடர்பை மேம்படுத்தும் வகையில், டெல்லி - மணிலா இடையே நேரடி விமானங்களை இயக்கவும் இரு நாடுகளும் திட்டமிட்டுள்ளன.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி - பிலிப்பீன்ஸ் அதிபர் ஃபெர்டினாண்ட் மார்க்கோஸ் ஜூனியர் இடையே செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 5) நடந்த இருதரப்புப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த அறிவிப்புகள் வெளியாயின.
திரு மார்க்கோஸ் ஐந்து நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா சென்றுள்ளார்.
“இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை உத்திபூர்வப் பங்காளித்துவமாக உயர்த்துவது என முடிவுசெய்துள்ளோம். அந்தப் பங்காளித்துவத்தைப் பயனுள்ளதாக்க விரிவான செயல்திட்டமும் உருவாக்கப்பட்டுள்ளது,” என்று திரு மோடி கூறினார்.
“விசா இல்லாமல் வந்துசெல்லும் சேவையை இந்தியச் சுற்றுப்பயணிகளுக்கும் நீட்டிக்கிறோம். அதுபோல், பிலிப்பீன்ஸ் மக்களுக்குக் கட்டணமில்லா இ-விசா சேவையை அறிமுகப்படுத்தியுள்ள பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாண்டு அக்டோபர் மாதத்திலிருந்து மீண்டும் நேரடி விமானங்களை இயக்கவிருப்பதை வரவேற்கிறோம்,” என்று திரு மார்க்கோஸ் தெரிவித்தார்.
பயணத்தை எளிதாக்குவது அவ்விரு நாடுகளுக்கு இடையிலான பங்காளித்துவத்திற்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
சுற்றுலா, தொழில்சார் பயணங்கள், பண்பாட்டுப் பரிமாற்றம் ஆகியவற்றை ஊக்குவிக்கும் நோக்கில் இரு நாடுகளும் விசா நடைமுறைகளை எளிதாக்கவும் நேரடி விமானங்களை இயக்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இந்தியாவும் பிலிப்பீன்சும் 75 ஆண்டு அரசதந்திர உறவுகளைக் கொண்டாடுகின்றன. அதனைக் குறிப்பிடும் வகையில், இரு தலைவர்களும் இணைந்து சிறப்பு அஞ்சல்தலையையும் வெளியிட்டனர்.
முன்னதாக, வரும் அக்டோபர் 1 முதல் டெல்லி - மணிலா இடையே நேரடி விமானங்களை இயக்கவிருப்பதாகக் கடந்த ஜூன் மாதம் ஏர் இந்தியா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பிஸ்னஸ், பிரீமியம் எக்கானமி, எக்கானமி என மூன்று வகுப்புகளுடன் வாரத்தில் ஐந்து நாள்களுக்கு அவ்விமானம் இயக்கப்படும்.