வாஷிங்டன்: ஒரு காலத்தில் இந்தியர்களின் கனவு தேசமாகக் கருதப்பட்ட அமெரிக்காவின் கவர்ச்சி, தற்போது அங்கிருக்கும் இந்தியர்களிடையே வேகமாக மங்கி வருவதாக ‘கார்னகி எண்டோவ்மென்ட்’ நிறுவனத்தின் அண்மைய ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
அமெரிக்க மக்கள் தொகையில் ஏறக்குறைய 1.6 விழுக்காடு அளவில் பங்களிக்கும் 54 லட்சம் இந்தியர்களில், ஏறத்தாழ 40 விழுக்காட்டினர் அந்நாட்டை விட்டு வெளியேற விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர்.
இவர்களில் 14 விழுக்காட்டு இந்தியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ள நிலையில், 26 விழுக்காட்டினர் அவ்வப்போது அந்த எண்ணம் தங்களுக்குத் தோன்றுவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த மனமாற்றத்திற்குப் பின்னால் முக்கிய காரணங்கள் இருப்பதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
குறிப்பாக, 71 விழுக்காட்டு இந்தியர்கள் அந்நாட்டின் தற்போதைய அரசியல் சூழலையும் அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் இரண்டாவது பதவிக்காலப் போக்கையும் தங்களுக்குச் சங்கடம் அளிப்பதாகக் கருதுகின்றனர்.
இதுதவிர, 54 விழுக்காட்டினர் விண்ணைத் தொடும் விலைவாசி உயர்வு, வீட்டு வாடகை, குழந்தை வளர்ப்புச் செலவுகளால் கடும் நிதி நெருக்கடியைச் சந்திப்பதாகக் கூறியுள்ளனர்.
மேலும், 41 விழுக்காட்டு இந்தியர்கள் பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஒரு முக்கிய காரணமாகக் குறிப்பிட்டுள்ளனர்.
ஒரு வல்லரசு நாட்டில் நிலவும் இந்தச் சூழல், அங்குள்ள புலம்பெயர்ந்த இந்தியர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

