ஏமாற்று வடிவமைப்பு உத்திகளால் ஆண்டுதோறும் ரூ.25,000 கோடி இழப்பு

ஏமாற்று வடிவமைப்பு உத்திகளால் ஆண்டுதோறும் ரூ.25,000 கோடி இழப்பு

2 mins read
0e333959-7528-480f-afe7-9f263b582ce7
புகார் அளித்தவர்களில் 23 விழுக்காட்டினர்க்கு மட்டுமே முறையான தீர்வு கிடைத்துள்ளது. - சித்திரிப்புப் படம்
Google News Preferred Icon

புதுடெல்லி: இணையத்தளங்கள், செயலிகளில் பயன்படுத்தப்படும் ஏமாற்று வடிவமைப்பு உத்திகள் மூலம் இந்தியாவில் இணையப் பயனீட்டாளர்கள் ஆண்டுதோறும் குறைந்தபட்சம் ரூ.25,000 கோடியை இழப்பதாக அண்மை ஆய்வில் தெரியவந்துள்ளது.

மின்னிலக்கத் துறையில் இந்தியா வேகமாக முன்னேறி வந்தாலும் இணைய மோசடிக்காரர்கள் பல்வேறு நூதன முறைகளைப் பயன்படுத்தி ஏமாற்றி பணம் பறிப்பது குறையவில்லை.

இந்நிலையில், ‘டார்க் பேட்டன்ஸ்’ (Dark Patterns) எனப்படும் ஏமாற்று வடிவமைப்பு உத்தி மூலம் ஆயிரக்கணக்கானோர் ஏமாறுவது ‘டேட்டம் இன்டெலிஜென்ஸ்’ என்ற சந்தை ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின்மூலம் தெரியவந்துள்ளது.

ஐம்பது இந்திய நகரங்களில், ஏறக்குறைய 2,600 பேரிடம் அந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில் ஏமாற்று உத்திகள் மூலம் இந்தியாவின் மொத்த மின்வணிகச் சந்தையில் ஏறக்குறைய ரூ.55,000 கோடி மதிப்புள்ள வணிகம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது தெரியவந்துள்ளதாக டேட்டம் நிறுவனம் கூறியுள்ளது.

இணையத்தளங்கள், செயலிகள் மூலம் பயனீட்டாளர்கள் தாங்கள் வாங்க விரும்பாத பொருள்களை வாங்குவதற்கோ அல்லது தேவையின்றிக் கூடுதல் கட்டணம் செலுத்துவதற்கோ தூண்டும் வகையில், சில மின்னிலக்கப் பக்கங்கள் வடிவமைக்கப்படுகின்றன. இதனைத்தான் ‘டார்க் பேட்டன்ஸ்’ என்று குறிப்பிடுகிறார்கள்.

பயனீட்டாளர் தங்களை அறியாமல் கூடுதலாக வரி செலுத்துவது, தேவையற்ற கூடுதல் சேவையை அல்லது பொருளைப் பெறுவதற்கு கட்டணம் செலுத்துவது, சில பொருள்களைச் சலுகை விலையில் வாங்குவதற்கான கால அவகாசம் முடிந்துவிடும் எனப் பொய் விளம்பரம் செய்து அவசரப்படுத்துவது ஆகிய நடவடிக்கைகளுக்காக ஏமாற்று வடிவமைப்பு உத்தி பயன்படுத்தப்படுகிறது.

இதையடுத்து, இந்திய பயனீட்டாளர் பாதுகாப்பு ஆணையம் ஈராண்டுகளுக்கு முன்பே 13 வகையான உத்திகளுக்குத் தடை விதித்துள்ளது.

மேலும், 26 முன்னணி மின்வணிக நிறுவனங்கள் தாங்கள் இந்த உத்திகளைப் பயன்படுத்தப் போவதில்லை என அரசிடம் உறுதியளித்துள்ளன.

டேட்டம் நிறுவன ஆய்வில் பங்கேற்றோரில் 81 விழுக்காட்டினர், இந்த ஏமாற்று உத்திகளைத் தங்களால் கண்டறிய முடிகிறது என்று கூறியுள்ள நிலையில், 85% பேர் தாங்கள் இன்னும் ஏமாற்றப்படுவதாக ஒப்புக்கொண்டுள்ளனர்.

இது தொடர்பாகப் புகார் அளித்தவர்களில் 23% பேருக்கு மட்டுமே முறையான தீர்வு கிடைத்துள்ளதாக ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.

குறிப்புச் சொற்கள்