பிரிட்டனில் நிரந்தரவாசம், குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதில் இந்தியர்கள் முதலிடம்

பிரிட்டனில் நிரந்தரவாசம், குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதில் இந்தியர்கள் முதலிடம்

2 mins read
24e1767d-3cad-4052-b187-82ac468cef1b
குடியேற்றம் குறித்த புதிய மசோதாவை பிரிட்டன் உள்துறை அமைச்சர் ஷாபனா மஹ்மூத் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார். - படம்: தி டெலிகிராப்
Google News Preferred Icon

லண்டன்: பிரிட்டனில் புலம்பெயர்வோருக்கான விதிகள் கடுமையாக்கப்படவுள்ள நிலையில், அந்நாட்டில் நிரந்தரவாசம், குடியுரிமை கோருவோரின் பட்டியலில் இந்தியர்கள் பெருமளவில் விண்ணப்பித்துள்ளனர்.

நிரந்தரவாசம், குடியுரிமைக்கான விண்ணப்பங்கள் 17 விழுக்காடு அதிகரித்து 315,224 ஆக அதிகரித்துள்ளதாக பிரிட்டன் உள்துறை அமைச்சு வெளியிட்ட தரவுகள் தெரிவித்தன.

முறையாக விசா பெற்று பிரிட்டனில் வசிப்பவர்களுக்குத் தற்போது ஐந்து ஆண்டுகளில் நிரந்தரவாசத் தகுதி வழங்கப்பட்டு வருகிறது. 2027இறுதியில் அந்த காலஅவகாசம் 10 ஆண்டுகளாக அதிகரிக்கப்படவுள்ளது.

ஜூன் மாதம் வரையிலான நிலவரப்படி, 35,384 இந்தியர்களுக்கு நிரந்தரவாசத் தகுதி வழங்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 51 விழுக்காடு அதிகம். பணி விசா மூலம் பிரிட்டன் சென்று, தங்க வேண்டிய காலத்தை நிறைவு செய்ததே அதற்கு முக்கியக் காரணமாகும். 2025-2026 காலகட்டத்தில் 24,851 பேருக்கு பிரிட்டிஷ் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. இதில் இந்தியா முதலிடத்திலும், பாகிஸ்தான் இரண்டாமிடத்திலும் உள்ளன.

படிப்பை முடித்த பின்னர் பணியாற்றுவதற்கான விசா பிரிவில் 64,496 இந்தியர்களுக்கு விசா வழங்கப்பட்டுள்ளது. மாணவர் விசா விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டதால், மாணவர்களைச் சார்ந்த குடும்ப உறுப்பினர்களுக்கான விசாக்களில் 81 விழுக்காடு சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்திய மாணவர்களுக்கான விசா 16 விழுக்காடு குறைந்து, 85,523 ஆகியுள்ளது; இதனால் சீன மாணவர்களுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாமிடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

குறைந்த ஊதியம் பெறும் ஊழியர்கள் நிரந்தரவாசத் தகுதியைப் பெற 15 ஆண்டுகளும், வரி பலன்களைப் பெற 20 ஆண்டுகளும் ஆகும் வகையில் புதிய மசோதாவை உள்துறை அமைச்சர் ஷாபனா மஹ்மூத் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார்.

குறிப்புச் சொற்கள்