புதுடெல்லி: இந்தியாவின் தற்காப்புத் துறையில் மேலும் ஒரு வரலாற்றுச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
உள்நாட்டிலேயே முழுமையாக உருவாக்கப்பட்ட, வழக்கமான போர்முனைகளைத் தாங்கிச் செல்லும் திறன் கொண்ட பிரளய் குவாசி-பாலஸ்டிக் ஏவுகணை ஒடிசா கடற்கரைக்கு அப்பால் உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தீவில் இருந்து வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்பான DRDO உருவாக்கியுள்ள இந்த ஏவுகணை, 500 முதல் 1,000 கிலோ வரையிலான சுமையைச் சுமந்து சென்று குறுகியதூர இலக்குகளைத் தாக்கக்கூடிய வல்லமை படைத்தது.
திடஎரிபொருளை அடிப்படையாகக் கொண்ட இந்த ஏவுகணையில், துல்லியமாக இலக்கைத் தாக்க அதிநவீன வழிகாட்டுதல் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
இந்தச் சோதனை வெற்றியடைந்துள்ளதன் மூலம், இந்த வலிமைமிக்க ஏவுகணை அமைப்பை இந்திய ராணுவத்தில் அதிகாரபூர்வமாக இணைப்பதற்கான அடுத்தகட்ட நகர்வுகள் தீவிரமடைந்துள்ளன. பல்வேறு இலக்குகளுக்கு எதிராக பல வகையான போர்முனைகளை ஒரே நேரத்தில் கையாளுவதில் இந்த ஏவுகணை சிறந்து விளங்குகிறது.
இதற்கிடையே, தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது எக்ஸ் தளப் பதிவில், பயனர் மதிப்பீட்டு சோதனைகளின்படி நிர்ணயிக்கப்பட்ட அனைத்து இலக்குகளும் துல்லியமாக எட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பல கண்காணிப்பு கருவிகள் மூலம் பெறப்பட்ட தரவுகள் இந்தச் சோதனையின் முழு வெற்றியை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
