புதுடெல்லி: இந்தியாவில் பிறப்பு விகிதம் குறைந்துவிட்டதாக ஐநா தெரிவித்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, இந்தியாவின் மக்கள் தொகை 146.3 கோடியாக உள்ளது. அதாவது, உலக மக்கள் தொகையான 823 கோடியில் இது 17.7 விழுக்காடு ஆகும்.
இந்தியாவில் கடந்த ஆண்டில் மட்டும் 2.30 கோடி பிறப்புகள் பதிவாகியுள்ளன. உலக அளவில் ஒரு நாட்டில் ஒரே ஆண்டில் பிறந்த ஆக அதிகமான குழந்தைகளின் எண்ணிக்கை இதுதான் என ஐநா கூறியுள்ளது.
இதனிடையே, 2024ஆம் ஆண்டு இந்தியாவில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 2.34 கோடியாக பதிவாகியுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை பிறப்பு எண்ணிக்கை 7.80 லட்சமாக இருக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.
அதிகமாக இருப்பதுபோல் தோன்றினாலும், முந்தைய ஆண்டுகளைவிட பிறப்பு விகிதம் குறைந்து இருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த 1960களில் ஒரு பெண்ணுக்கு சராசரியாக ஆறு குழந்தைகள் என்ற நிலை மாறி, தற்போது 1.9 குழந்தைகளாகக் குறைந்துவிட்டது. இது 2.1 என்ற நிலைத்தன்மை விகிதத்தைவிட குறைவாகும்.
உரிய நேரத்தில் திருமணம் ஆகாதது, தாமதமான கருத்தரிப்பு, வேலை வாய்ப்பு, கல்வி வாய்ப்புகள் குறைந்துபோனது. குடும்பக்கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு ஆகியவை பிறப்பு விகிதம் குறைந்ததற்கு முக்கிய காரணிகளாக கூறப்படுகின்றன.
மேலும் குழந்தை வளர்ப்புக்கு ஆகும் செலவுகளையும், ஒரு தரப்பினர் சுட்டிக்காட்டுகின்றனர். 2025 ஆம் ஆண்டு பிறப்பு எண்ணிக்கையைப் பொறுத்தவரை இந்தியாவுக்கு அடுத்து சீனா (87 லட்சம்), நைஜீரியாவில் (76 லட்சம்), பாகிஸ்தானில் (69 லட்சம்), இந்தோனீசியாவில் (44 லட்சம்), பங்ளாதேஷில் (34 லட்சம்) ஆகிய நாடுகள் அடுத்தடுத்து இடம்பெற்றுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
2026ஆம் ஆண்டு இந்தியாவில் பிறப்பு எண்ணிக்கை 2.29 கோடியாக இருக்கக்கூடும் என ஐநா கணித்துள்ளது.
இதனிடையே எதிர்வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை நடத்த இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன் பிறகு பிறப்பு இறப்பு குறித்த மேலும் துல்லியமான தரவுகள் வெளியாகும்.

