தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டிரம்ப் வரி விவகாரம்: இந்திய வர்த்தக அமைச்சர் அமெரிக்கா விரைவார்

1 mins read
6b541b6b-5144-404e-8da3-8786358d4dbc
இந்தியாவின் வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல். - படம்: ஊடகம்

புதுடெல்லி: இந்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் விரைவில் அமெரிக்கா செல்வார் என்று இந்திய ஊடகச் செய்தி ஒன்று தெரிவித்துள்ளது.

அமெரிக்க-இந்திய உறவில் ஏற்பட்டுள்ள விரிசல்களை சரிசெய்யும் நோக்கில் அவரது அந்தப் பயணம் அமைய உள்ளதாக பிடிஐ செய்தியை மேற்கோள் காட்டி இந்தியாவின் ‘இ.டி. நவ்’ ஊடகம் கூறியுள்ளது.

இருப்பினும், அந்தப் பயணம் எப்போது என்பதை அது தெரிவிக்கவில்லை.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் திரு கோயலை தொடர்புகொண்டு விசாரித்தபோது அதுபற்றி அவர் உடனடிக் கருத்து எதையும் கூறவில்லை.

இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு 50 விழுக்காட்டு வரியை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கடந்த மாதம் விதித்து இருந்தார். அந்தப் புதிய வரி ஆகஸ்ட் 27ஆம் தேதி நடப்புக்கு வந்தது.

அந்த வரியைக் குறைப்பது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

அமெரிக்காவின் வர்த்தக பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவர் பிரென்டன் லிஞ்ச் கடந்த செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 16) இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் இருந்தார். இந்திய வர்த்தகக் குழுவுடன் அவர் பேச்சு நடத்தினார்.

அன்றைய தினம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் திரு டிரம்ப் தொலைபேசியில் உரையாடியதாகத் தெரிகிறது.

இந்நிலையில், அபுதாபியில் செய்தியாளர்களிடம் பேசிய திரு கோயல், “இந்​தி​யா​வும் அமெரிக்கா​வும் மிக நெருங்​கிய நட்பு நாடு​கள். இரு நாடு​கள் இடையி​லான வர்த்தகப் பேச்​சு​வார்த்தை சரியான திசை​யில் செல்கிறது,” என்றார்.

குறிப்புச் சொற்கள்