இந்தியாவின் கடன் சுமை குறைகிறது: நிர்மலா சீதாராமன்

இந்தியாவின் கடன் சுமை குறைகிறது: நிர்மலா சீதாராமன்

படம்: இந்து தமிழ் திசை

26 Oct 2026 - 8:00 pm

1 mins read

திருச்சி: இந்திய நாட்டின் கடன் சுமை ஆண்டுதோறும் தொடர்ந்து குறைந்து வருவதாக இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு நிதி அமைப்புகள் வெளியிடும் அனைத்துலக ஒப்பீட்டுத் தரவுகள் மூலம் அது உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.

இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு நிகராக தானாகவே சந்தை நிலவரப்படி சமநிலையை அடையும் என்றும் இதில் இந்திய அரசு அல்லது அந்நாட்டின் ரிசர்வ் வங்கி செயற்கையாக எந்த வரம்பையும் நிர்ணயிப்பது இல்லை என்றும் அமைச்சர் நிர்மலா தெளிவுபடுத்தினார்.

அதேவேளையில் ரூபாயின் மதிப்பு அதிரடியாகச் சரிவதையோ அல்லது சட்டென்று உயர்வதையோ கட்டுப்படுத்தும் பணியை மட்டுமே ரிசர்வ் வங்கி மேற்கொள்வதாக அவர் சுட்டிக்காட்டினார்.

‘கொவிட்-19’ பேரிடருக்கு முன்பும் பின்பும் நாட்டின் கடனைக் குறைக்க இந்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர், உலக அளவில் கச்சா எண்ணெய் விலையில் காணப்படும் ஏற்ற இறக்கங்கள் இந்தியக் குடிமக்களைப் பாதிக்காத வகையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

வரும் 2030ஆம் ஆண்டுக்குள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், கடன் அளவை 50 விழுக்காடாகக் குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதற்கான அனைத்து தீவிர நடவடிக்கைகளும் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருவதாக இந்திய நிதியமைச்சர் மேலும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்