புதுடெல்லி: பெரம்பூரில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் இந்தியாவின் முதல் ‘ஹைட்ரஜன்’ ரயில் தயாரிப்புப் பணி கடந்த ஆண்டு தொடங்கியது.
முதற்கட்ட சோதனையோட்டம் ஜூலை மாதம் முடிவுற்ற நிலையில், அடுத்தகட்ட சோதனைக்காக விரைவில் இந்த ரயில் புதுடெல்லிக்கு அனுப்பப்படவுள்ளது.
‘ஹைட்ரஜன்’ மூலம் இயங்குவதால், இந்த ரயிலிலிருந்து புகை வெளியேறாது. மேலும், கரிம வெளியேற்றத்தைக் குறைத்து, மின்சாரத்தில் இயங்கும் ரயிலைவிட சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக அது இருக்கும் எனக் கூறப்படுகிறது.
கிட்டத்தட்ட ரூ.118 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள அந்த ரயிலில் மொத்தம் 10 பெட்டிகள் உள்ளது என்றும் ஒவ்வொரு பெட்டியிலும் 84 பயணிகள்வரை பயணம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அதிகபட்சமாக மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் அந்த ரயிலில், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு கண்காணிப்புக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், நவீன கழிவறை வசதிகள், தானியங்கி கதவுகள் போன்ற வசதிகளும் அதில் உள்ளன.
அனைத்து சோதனைகளும் வெற்றிகரமாக முடிந்த பிறகு, ஹரியானா மாநிலத்தின் சோனிபட் - ஜிந்த் இடையே இந்த ரயில் இயக்கப்பட உள்ளது.
இந்திய ரயில்வேயின் இந்தப் புதிய முயற்சி, எதிர்காலத்தில் பசுமையான, நீடித்த ரயில் போக்குவரத்துக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.