தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எழுத்தறிவு விகிதம் 80.9 விழுக்காடு ஆக உயர்வு: இந்திய அமைச்சர்

2 mins read
79d5c4f4-330f-454d-b1d3-92a7f8e0164b
இந்தியாவின் எழுத்தறிவு விகிதம் உயர்ந்து வருவதாக அனைத்துலக எழுத்தறிவுத் தினத்தில் பேசிய இந்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: இந்தியாவின் எழுத்தறிவு விகிதம் 2023-24ஆம் ஆண்டில் 80.9 விழுக்காடாக உயர்ந்துள்ளது. 2011ஆம் ஆண்டின் 74 விழுக்காட்டில் இருந்து உயர்ந்துள்ள இந்த விகிதம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகப் பார்க்கப்படுகிறது.

எனினும், ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கையிலும் கல்வி என்பது இயல்பானதாக மாறும்போதே உண்மையான முன்னேற்றம் ஏற்படும் என்று இந்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

“கல்வி என்பது வெறும் வாசிப்பு, எழுதுவது மட்டுமல்ல. அது ஒருவரின் கண்ணியம், அதிகாரம், தன்னம்பிக்கைக்கான வழி,” என்று எழுத்தறிவுத் தினமான திங்கட்கிழமை அன்று (செப்டம்பர் 8) காணொளியில் பேசிய அவர் கூறினார்.

மத்திய அரசின் (ULLAS) புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தின் கீழ் மூன்று கோடிக்கும் அதிகமான மாணவர்கள், 42 லட்சத்திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இணைந்துள்ளனர். இந்தத் திட்டத்தின் மூலம் கிட்டத்தட்ட 1.83 கோடி மாணவர்களின் அடிப்படை எழுத்தறிவு, எண் அறிவை மதிப்பீடு செய்யப்பட்டது. அதில் 90 விழுக்காட்டினர் வெற்றி பெற்றுள்ளனர். இந்தத் திட்டம் தற்போது 26 இந்திய மொழிகளில் கற்றல் கருவிகளை வழங்கி வருகிறது.

இமாச்சலப் பிரதேசம், திரிபுரா, மிசோரம், கோவா ஆகிய மாநிலங்கள் முழுமையான எழுத்தறிவை எட்டியுள்ளன. 2024 ஜூன் மாதம் லடாக் யூனியன் பிரதேசம் முழுமையாக எழுத்தறிவு பெற்ற முதல் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.

இந்த ஆண்டின் கொண்டாட்டத்தின் கருப்பொருள் ‘மின்னிலக்க யுகத்தில் கல்வியை மேம்படுத்துதல்’. இது நாடு முழுவதும் வாசிப்பு, எழுதுதல், கணக்கியல், வாழ்நாள் கற்றல் திறன்களை வளர்ப்பதில் மின்னிலக்கத் தொழில்நுட்பம் வகிக்கும் முக்கியப் பங்கை எடுத்துக்காட்டுகிறது.

“இந்தியாவில் கல்வியானது, மின்னிலக்கக் கல்வியையும் உள்ளடக்கி விரிவடைந்துள்ளது,” என்று இந்தியக் கல்வி இணை அமைச்சர் ஜெயந்த் சௌத்ரி கூறினார்.

குறிப்புச் சொற்கள்