இந்தியாவின் உற்பத்தி வளர்ச்சி ஒன்பது மாதம் காணாத சரிவு

2 mins read
4566b7ce-220b-4cc4-98d5-bcd280d93c2d
ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் உற்பத்தித் துறை நல்ல வளர்ச்சியைச் சந்தித்தபோதிலும் அமெரிக்க வரிவிதிப்பின் முழுமையான தாக்கத்தால் நவம்பரில் சுருங்கியது. - படம்: ஊடகம்

பெங்களூரு: இந்தியாவின் உற்பத்தித் துறை வளர்ச்சி ஒன்பது மாதம் காணாத சரிவை நவம்பர் மாதம் சந்தித்துள்ளதாக திங்கட்கிழமை (நவம்பர் 1) வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவித்தது.

ஆசியாவின் மூன்றாவது பொருளியல் நாடான இந்தியாவின் உற்பத்தி வேகம் ஆகக் கடைசி காலாண்டில், எதிர்பார்க்கப்பட்டதைக் காட்டிலும் வேகமாக 8.2 விழுக்காடு வளர்ச்சியைப் பதிவு செய்தது. ஜூலை முதல் செப்டம்பர் வரை உற்பத்தி வளர்ச்சியின் வேகம் சிறப்பாக இருந்தது என கடந்த வெள்ளிக்கிழமை (நவம்பர் 28) அரசாங்கம் வெளியிட்ட தரவுகள் அதனைத் தெரிவித்தன.

இருப்பினும், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் விதித்த கடுமையான வரிகள் நடப்புக்கு வந்துவிட்டதால் அதன் தாக்கம் நவம்பர் மாதம் வெளிப்படையாகத் தெரிந்ததாக ‘எஸ் அண்ட் பி குளோபல்’ (S&P Global) நிறுவனம் நடத்திய ஆய்வு குறிப்பிட்டது. உற்பத்தியிலும் விற்பனையிலும் ஏற்பட்ட மந்தநிலை காரணமாக வளர்ச்சியின் வேகம் குறைந்துள்ளதாக அது கூறியது. அதன் காரணமாக, இந்தக் காலாண்டின் வளர்ச்சி விகிதம் சுருங்கக்கூடும் என்று முன்னுரைக்கப்பட்டு உள்ளது.

திரு டிரம்ப் இந்தியாவுக்கு எதிராக விதித்த 50 விழுக்காட்டு வரி, ஏற்றுமதியைப் பாதித்ததோடு உற்பத்தியையும் மெதுவடையச் செய்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆப்பிரிக்க, ஐரோப்பிய நாடுகளில் இருந்து ஏற்றுமதிக்கான ஆர்டர்களை இந்திய நிறுவனங்கள் பெற்றபோதிலும் புதிய ஆர்டர்கள் கடந்த 13 மாதங்களில் காணாத சரிவைச் சந்தித்துள்ளன.

இந்நிலையில், வரலாறு காணாத வரிவிதிப்பு மற்றும் அனைத்துலகப் போட்டி காரணமாக இந்தியாவில் உள்ள நிறுவனங்களின் வருங்காலம் மீதான நம்பிக்கைக் குறியீடு கடந்த மூன்றரை ஆண்டுகளில் காணாத அளவுக்கு இறக்கம் கண்டிருக்கிறது. இதனை ‘எஸ் அண்ட் பி குளோபல்’ தனது நவம்பர் மாத அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்