புதுடெல்லி: விமானம் தாங்கிக் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், போர்க்கப்பல்கள், எஃகினால் ஆன பல கப்பல்களைக் கொண்டிருக்கும் இந்தியக் கப்பற்படை தனிச்சிறப்புமிக்க புதிய கப்பலைப் பெற்றிருக்கிறது.
இந்தியப் பெருங்கடலில் திங்கட்கிழமை (டிசம்பர் 29) தனது முதல் பயணத்தைத் தொடங்கிய ‘ஐஎன்எஸ்வி கௌண்டின்யா’ முழுக்க முழுக்க பாரம்பரிய முறையில் கட்டப்பட்டுள்ள பாய்மரக் கப்பலாகும்.
புகழ்பெற்ற இந்திய மாலுமியான கௌண்டின்யாவின் பெயர் சூட்டப்பட்டுள்ள அக்கப்பலின் மரப் பலகைகள் ஆணிகள் பயன்படுத்தாமல், பண்டைய முறையில் தேங்காய் நார் கயிறு, இயற்கை பசைகளால் வலுவாக இணைக்கப்பட்டுள்ளன.
குஜராத்தின் போர்பந்தரிலிருந்து ஓமானின் மஸ்கட்டுக்கு 1,400 கிலோ மீட்டர் தூரப் பயணம் மேற்கொண்டுள்ள ஐஎன்எஸ்வி கௌண்டின்யா’ ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியாவை உலகத்துடன் இணைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க கடல்வழிப் பாதைகளில் பயணிக்கும்.
“இந்த கடற்பயணம் கடந்த காலத்தை நிகழ்காலத்துடன் மீண்டும் இணைக்கிறது,” என்று துணை அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் கூறினார்.
குஜராத்தின் மேற்கு மாநிலமான போர்பந்தரில் இருந்து, அரேபிய தீபகற்பத்திற்கு இரண்டு வாரங்களில் கடந்து செல்லும் என மதிப்பிடப்பட்ட இந்தப் பயணத்தை கொடியசைத்து அவர் தொடங்கி வைத்தார்.
“வணிகம், கடற்பயணம், பண்பாட்டுப் பரிமாற்றத்தின் பண்டைய பாதைகளில் மீண்டும் பயணிப்பதுடன், இந்தியப் பெருங்கடல் முழுவதும் இயற்கையான கடல்சார் பாலமாக இந்தியாவின் நிலையை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்,” என்றார் அவர்.
இது, இந்திய மாலுமிகள் ரோமானியப் பேரரசு, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா, கிழக்கிலுள்ள நாடுகளுடன் - இன்றைய தாய்லாந்து, இந்தோனீசியா, சீனா, ஜப்பான் வரை - வழக்கமான வணிகர்களாக இருந்த ஒரு காலத்தை நினைவூட்டுகிறது,” என்று திரு சுவாமிநாதன் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
“பண்டைய இந்திய கடல்சார் உத்திகள், திறன்களை அவற்றின் அனைத்து வடிவங்களிலும் மீட்டெடுப்பதையும் புதுப்பிப்பதையும் நோக்கமாகக் கொண்டிருப்பதால், இது இந்தியாவுக்கு ஆழமான உத்திபூர்வ, பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்தது,” என அவர் குறிப்பிட்டார்.
இந்தப் பயணம் மிகவும் சவால் மிக்கது. அதன் கட்டுமானக் கலைஞர்கள், இந்திய மாலுமிகளால் ஒரு காலத்தில் பயன்படுத்தப்பட்ட பாரம்பரிய கப்பல் கட்டும் முறைகளையே கைக்கொண்டுள்ளனர். கப்பலின் 18 பேர் கொண்ட குழுவினர் ஏற்கெனவே கர்நாடகாவில் இருந்து குஜராத் வரை இந்தியாவின் பனைமரங்கள் நிறைந்த கடற்கரையோரமாக வடக்கு நோக்கி பயணித்துள்ளனர்.

