இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறன் 530 கிகாவாட்டை எட்டும்: அனைத்துலக எரிசக்தி முகமை

இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறன் 530 கிகாவாட்டை எட்டும்: அனைத்துலக எரிசக்தி முகமை

சித்திரிப்புப் படம்: தினமணி

07 Nov 2026 - 5:48 pm

2 mins read

புதுடெல்லி: எதிர்வரும் 2030ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறன் ஏறக்குறைய 530 கிகாவாட்டை எட்டும் என அனைத்துலக எரிசக்தி முகமை தனது புதிய அறிக்கையில் கணித்துள்ளது.

உலகின் இரண்டாவது மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளர்ச்சிச் சந்தையாக இந்தியா வேகமாக உருவெடுத்து வருவதை விளக்கிக் கூறும் வகையில் அந்த அறிக்கை அமைந்துள்ளது.

கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவின் பசுமை எரிசக்தித் திறன் கிட்டத்தட்ட நான்கு மடங்காகப் பெருகி, நடப்பாண்டில் 300 கிகாவாட்டை எட்டியுள்ளது. குறிப்பாக, சூரியஒளி மின்சக்தித் துறையில் இந்தியா மிகப்பெரிய அடியெடுத்து வைத்துள்ளது.

2030க்குள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள 530 கிகாவாட் திறனில், 80 விழுக்காட்டுக்கும் அதிகமான பங்களிப்பைச் சூரியஒளி மின்சக்தியே வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உச்சநிலை மாநாட்டில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வறிக்கையின்படி, புதைபடிவ எரிபொருள் அல்லாத ஆதாரங்களில் இருந்து 50 விழுக்காடு மின் உற்பத்தித் திறனை எட்ட வேண்டும் என்ற இந்தியாவின் இலக்கு, நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு ஐந்தாண்டுகளுக்கு முன்பாகவே அதாவது 2025ஆம் ஆண்டிலேயே வெற்றிகரமாக எட்டப்பட்டுள்ளது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையின் இந்த அசுர வளர்ச்சியால், நிலக்கரி, இயற்கை எரிவாயு இறக்குமதிக்காகச் செலவிடப்படும் தொகையில் ஏறக்குறைய 240 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை மிச்சமாகும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அது இந்தியப் பொருளியல் வளர்ச்சிக்கும் எரிசக்திப் பாதுகாப்புக்கும் பெரும் பலமாக அமையும்.

மேலும், இந்தியாவின் மொத்த மின் உற்பத்தியில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் பங்களிப்பு தற்போதைய 25 விழுக்காட்டில் இருந்து 35 விழுக்காடாக உயரும்.

ஆண்டுதோறும் சேர்க்கப்படும் பசுமை எரிசக்தித்திறன் தொடர்ச்சியாக 50 கிகாவாட்டிற்கும் அதிகமாக இருக்கும் எனவும் சாதகமான சூழலில் இது 70 கிகாவாட் வரை உயரக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டிகள் நிறைந்த ஏலங்கள், உறுதியான கொள்கைக் கட்டமைப்புகள், குறைந்துவரும் தொழில்நுட்பச் செலவுகள் ஆகியவை இந்தியாவின் இந்த எழுச்சிக்குக் முக்கிய காரணங்களாக விளங்குகின்றன.

இருப்பினும், இந்த வளா்ச்சிப்பாதையைத் தடையின்றித் தொடர மின் பரிமாற்றக் கட்டமைப்பை விரைவுபடுத்துவதும் ஆற்றல் சேமிப்பு வசதிகளை மேம்படுத்துவதும் அவசியமான சவால்களாக உள்ளன என அனைத்துலக எரிசக்தி முகமை எச்சரித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
எரிசக்திநிலக்கரிஇயற்கை எரிவாயுசூரிய மின்சக்திபொருளியல்