ர‌‌ஷ்ய எண்ணெய் இறக்குமதியை 50 விழுக்காடு அதிகரித்தது இந்தியா

ர‌‌ஷ்ய எண்ணெய் இறக்குமதியை 50 விழுக்காடு அதிகரித்தது இந்தியா

2 mins read
216b07e5-e1ca-48a1-89c4-cd65dbe321d0
மார்ச் மாதம் மட்டும் ஏறத்தாழ 1.5 மில்லியன் பீப்பாய் ரஷ்ய எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. - படம்: ஏஎஃப்பி

புதுடெல்லி: மத்திய கிழக்கில் அதிகரித்துவரும் பூசல் தொடர்பாக ஏற்பட்ட இடையூறுகள் காரணமாக இந்தியாவில் எரிசக்திப் பற்றாக்குறை ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.

பற்றாக்குறையை ஈடுசெய்ய இந்திய அரசாங்கம் மாற்று ஆதாரங்களைப் பயன்படுத்தியதால், இந்த மாதத்தில் இந்தியாவின் ரஷ்ய கச்சா எண்ணெய்க் கொள்முதல் 50 விழுக்காடு அதிகரித்துள்ளது.

இந்த மார்ச் மாதம் மட்டும் ஏறத்தாழ 1.5 மில்லியன் பீப்பாய் ரஷ்ய எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்துள்ளது.

இது, பிப்ரவரி மாதத்தில் கொள்முதல் செய்யப்பட்டட 1.04 மில்லியன் பீப்பாய் எண்ணெய்யைக் காட்டிலும் பாதிக்கும் மேல் அதிகம் என்று கப்பல் போக்குவரத்து தொடர்பான தரவுகள் காட்டுகின்றன.

உலகளவில் மூன்றாவது பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதி நாடான இந்தியா, அதன் எண்ணெய் தேவைகளில் 88 விழுக்காட்டை வெளிநாடுகளில் இருந்து பெறுகிறது.

நாள் ஒன்றுக்கு 5.8 மில்லியன் பீப்பாய்களை இந்தியா பயன்படுத்துகிறது.

அவற்றில், ஏறத்தாழ 2.5-2.7 மில்லியன் பீப்பாய் எண்ணெய் சவூதி அரேபியா, ஈராக், ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் போன்ற மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து ஹோர்முஸ் நீரிணை வழியாக இந்தியாவுக்கு வருகின்றன.

அதேபோல, இந்தியாவின் சமையல் எரிவாயு (LPG) தேவையில் 55 விழுக்காடும் மின்சாரம், உரங்கள் மற்றும் வீட்டு சமையலுக்குப் பயன்படுத்தப்படும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் (LNG) 30 விழுக்காடும் இறக்குமதி செய்யப்படுகின்றன.

மத்திய கிழக்கு மோதல் காரணமாக, ஹோர்முஸ் நீரிணை வழியான ஏற்றுமதிகள் பெருமளவில் தடைப்பட்டுள்ளன.

அதனால், ரஷ்யாவிலிருந்து மாற்று கச்சா எண்ணெய் ஆதாரங்களைத் தேடவேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது.

“மார்ச் மாதத்தில் ஹோர்முஸ் நீரிணை வழியாக இந்தியா நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 2.6 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது,” என நிபுணர்கள் கூறியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்