இந்தியா முழுவதும் பணியிடங்களில் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான ஆய்வை மேற்கொள்ள உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு, அதற்கென மருத்துவர்களை உள்ளடக்கிய பணிக்குழு ஒன்றை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கோல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 20) அந்தச் சம்பவம் தொடர்பான விசாரணையைத் தொடங்கியது. மூவர் அடங்கிய அந்த அமர்வில் சந்திரசூட்டுடன் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகிய நீதிபதிகளும் உள்ளனர்.
விசாரணையின்போது மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தாவும் மேற்கு வங்க அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபலும் முன்னிலையானார்கள்.
மருத்துவமனையில் மருத்துவர்களுக்குப் பாதுகாப்பு இல்லாதது ஓர் அடிப்படையான பிரச்சினை என்று தெரிவித்த தலைமை நீதிபதி சந்திரசூட், இந்தியா முழுவதும் உள்ள மருத்துவர்களின் பாதுகாப்பு தொடர்பாக சிக்கல்கள் இருப்பதாகக் குறிப்பிட்டார்.
உயிரிழந்த மாணவியின் பெயர், புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் ஊடகங்களில் வெளிவந்ததற்கு அவர் மிகுந்த கவலை தெரிவித்தார்.
மேலும், மாணவியின் மரணத்தை தற்கொலை வழக்காக மாற்ற மருத்துவக் கல்லூரியின் முதல்வர் முயன்றதாகவும் சந்திரசூட் குற்றம் சாட்டினார். இந்தச் சம்பவம் தொடர்பாக எஃப்ஐஆர் பதிவு செய்வதில் ஏற்பட்ட தாமதம் குறித்து நீதிபதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதனையடுத்து, இதுவரை நடத்தப்பட்ட விசாரணையின் நிலை குறித்து வியாக்கிழமை (ஆகஸ்ட் 22) அறிக்கை சமர்ப்பிக்குமாறு மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு (சிபிஐ) உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
தொடர்புடைய செய்திகள்
சம்பவம் நிகழ்ந்த மருத்துவமனையில் பாதுகாப்பு இல்லை என அங்கு பணியாற்றும் பெண் மருத்துவர்கள் புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து மத்திய பாதுகாப்புப் படையினரை அங்கு பாதுகாப்புப் பணியில் அமர்த்தவும் அது உத்தரவிட்டது.
தற்போது அமைக்கப்பட்டு உள்ள பணிக்குழு, மருத்துவமனைகளில் சீர்த்திருத்தங்களை மேற்கொள்ள நீதிமன்றம் பரிந்துரைத்தது.
மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்குப் பாதுகாப்பு வழங்குதல், கண்காணிப்புப் படச் சாதனங்களைப் பொருத்துதல், ஒவ்வொரு காலாண்டுக்கும் பாதுகாப்புத் தணிக்கையை மேற்கொள்ள மருத்துவமனை ஊழியர்களைக் கொண்ட குழுவை ஏற்படுத்துதல் போன்றவற்றில் ஈடுபடுமாறு பணிக்குழுவை நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.
கோல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முதுகலை பயிற்சி மருத்துவராக இருந்த பெண் ஒருவர் இம்மாதம் 9ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
நாட்டையே உலுக்கிய அந்தச் சம்பவத்தைக் கண்டித்து மருத்துவர்கள் நாடு தழுவிய போராட்டம் நடத்தி வரும் நிலையில் உச்ச நீதிமன்றம் அந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளது.