தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியாவின் வணிகப் பற்றாக்குறை எட்டு மாதங்களில் இல்லாத அளவு உயர்வு

2 mins read
073d9278-2ef2-4729-91fd-9c28aef39f72
இந்தியாவின் நவி மும்பையில் உள்ள கப்பல் கொள்கலன் கிடங்கு. - கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: இவ்வாண்டு ஜூலை மாதத்தில் இந்தியாவின் வணிகப் பற்றாக்குறை கடந்த எட்டு மாதங்களில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது.

இந்தியாவில் ஏற்றுமதியைக் காட்டிலும் இறக்குமதி வேகமாக அதிகரித்து வருகிறது.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் இந்தியா உள்ளிட்ட தனது வணிகப் பங்காளி நாடுகள்மீது இறக்குமதி வரிவிதிப்பை உயர்த்தியுள்ளார்.

அது இம்மாதம் நடப்பிற்கு வரவுள்ளது என்பதால் இந்தியாவின் ஜூலை மாத ஏற்றுமதியில் அது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இவ்வாண்டின் ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் இந்தியா 33.53 பில்லியன் அமெரிக்க டாலர் (S$42.94 பில்லியன்) மதிப்பிலான பொருள்களை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்தது. இது, 2024 இரண்டாம் காலாண்டைவிட 21.64% அதிகம். சென்ற ஆண்டின் இரண்டாம் காலாண்டில் அமெரிக்காவிற்கான இந்தியாவின் ஏற்றுமதியானது 27.57 பில்லியன் டாலராக இருந்தது.

அதேபோல், அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களின் மதிப்பும் 15.50 பில்லியன் டாலரிலிருந்து 17.41 பில்லியன் டாலராக உயர்ந்தது.

இந்திய அரசாங்கம் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 14) வெளியிட்ட தரவுகள்மூலம் இவை தெரியவந்தன.

இதனிடையே, ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்தியாவிற்குக் கூடுதலாக 25% இறக்குமதி வரி விதிப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்தார். ஒட்டுமொத்தத்தில், மற்ற எந்தப் பங்காளி நாட்டிற்கும் இல்லாத வகையில் இந்தியாவிற்கு அமெரிக்கா 50% இறக்குமதி வரி விதித்துள்ளது.

இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் 35.14 பில்லியன் டாலராக இருந்த இந்தியாவின் ஏற்றுமதி, அதற்கடுத்த ஜூலையில் 37.24 பில்லியன் டாலராக உயர்ந்தது. அதே நேரத்தில், இறக்குமதியும் 53.92 பில்லியன் டாலரிலிருந்து 64.59 பில்லியன் டாலராகக் கூடியது.

இதனையடுத்து, ஜூலையில் வணிகப் பற்றாக்குறையானது 27.35 பில்லியனாக இருந்தது. இது பொருளியல் வல்லுநர்களின் கணிப்பான 20.35 பில்லியன் டாலரைவிட அதிகம். அதற்கு முந்திய மாதத்தில் இது 18.78 பில்லியன் டாலராக இருந்தது.

முன்னதாக, 2024 நவம்பர் மாதம் இந்தியாவின் வணிகப் பற்றாக்குறை 37.8 பில்லியன் டாலராகப் பதிவாகியிருந்தது.

நிலையில்லா உலகச் சூழலுக்கு இடையிலும், பொருளியல், மின்னணுவியல், அணிகலன்கள் உள்ளிட்ட துறைகள் காரணமாக ஜூலையில் இந்தியாவின் பொருள், சேவை ஏற்றுமதி கூடியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்