ரிஷிகேஷ்: இந்தியாவின் மிக நீளமான சுரங்க ரயில்பாதை அமைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
உத்தராகண்ட் மாநிலத்தின் ரிஷிகேஷ் - கர்ணபிரயாக் பகுதிகளுக்கு இடையே, மலைகள் சூழ்ந்த பகுதியில் அமைய உள்ள இந்தச் சுரங்க ரயில் பாதைக்கான பணிகளை அவர் புதன்கிழமை (ஏப்ரல் 16) பார்வையிட்டார்.
மொத்தம் 16 சுரங்கப்பாதைகள், 12 துணை சுரங்கங்கள் என 213 கிலோ மீட்டர் நீளத்துக்கு சுரங்க ரயில்பாதைகள் அமைக்கப்படுகின்றன என்றும் அதில் 195 கிமீ தொலைவிலான பணிகள் நிறைவு பெற்றுவிட்டன என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
புதிய ரயில் பாதை பயன்பாட்டுக்கு வந்த பிறகு உத்தராகண்டின் மலை மாவட்டங்களுக்குச் செல்லும் பயண நேரம் வெகுவாக குறையும் என்றார் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்.
மேலும், ஆன்மிகத் தலங்கள், சுற்றுலா, உள்ளூர் மக்களின் தொழில் வளர்ச்சிக்கு இந்த சுரங்க ரயில்பாதை மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த நிலையில், இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, தேவ் பிரயாகை - ஜனாசு இடையே மலையைக் குடைந்து சுமார் 14.58 கிமீ நீள சுரங்க ரயில்பாதை அமைக்கும் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இது இந்திய ரயில்வே துறையின் புதிய மைல்கல் திட்டம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மிக விரைவில் இந்தியாவின் மிக நீளமான போக்குவரத்து சுரங்கப்பாதை எனும் பெருமை இந்தச் சுரங்கப்பாதைக்குக் கிடைக்கும் என்றும் கூறியுள்ளனர்.

