புதுடெல்லி: முழுக்க உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டுத் தயாரிக்கப்பட்ட ‘ககாந்தக்-243’ என்ற வெடிகுண்டை இந்திய விமானப் படை வெற்றிகரமாகச் சோதித்தது.
நீண்ட தூரத்தில் உள்ள இடத்தைத் துல்லியமாகக் காட்டக்கூடிய அந்த ‘கிளைட்’ வகை வெடிகுண்டு நாட்டின் தற்காப்புத் திறனை மேலும் வலுப்படுத்தும் என ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
எதிரிகளின் வான் பாதுகாப்பு வளையத்திற்குள் நுழையாமல், தொலைதூரத்தில் இருந்தே இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் ‘ஸ்டாண்ட்-ஆஃப்’ தொழில்நுட்பத்தில் ‘ககாந்தக்-243’ வெடிகுண்டு செயல்படுகிறது.
இதனால் இந்தியப் போர் விமானங்களுக்கும் விமானிகளுக்கும் தேவையான பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது என்றும் தரைக்கட்டுப்பாட்டு மையங்களில் இருந்து ஏவப்படும்போது, ‘ககாந்தக்-243’ வெடிகுண்டு எதிரி நாட்டின் முக்கியமான உள்கட்டமைப்புகள், ராணுவ முகாம்களைத் துல்லியமாகச் சேதப்படுத்தும் திறன் கொண்டது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
‘தற்சார்பு இந்தியா’ (ஆத்மநிர்பார் பாரத்) என்ற திட்டத்தின்கீழ் உள்நாட்டுத் தற்காப்பு உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வரும் நிலையில், இத்தகைய அதிநவீன ஆயுதங்கள் இந்திய நிறுவனங்களாலேயே உருவாக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ‘ககாந்தக்-243’ வெடிகுண்டு வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டிருப்பது தற்காப்புத் துறையில் இந்தியாவின் முன்னேற்றத்தை உலகிற்கு எடுத்துக்காட்டியுள்ளதாகத் தற்காப்பு அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.


