புதுடெல்லி: இண்டிகோ விமான நிறுவனம் உள்நாட்டு, வெளிநாட்டு விமானச் சேவைகளில் பல்வேறு கட்டணச் சலுகைகளை அறிவித்துள்ளது.
‘பருவமழைக்கால விற்பனை’ குறித்துச் செவ்வாய்க்கிழமை (ஜூன் 24) அது தகவல் வெளியிட்டது.
இந்தச் சலுகை ஜூன் 24 முதல் 29ஆம் தேதி வரை செய்யப்படும் முன்பதிவுகளுக்கு வழங்கப்படும். ஜூலை 1ஆம் தேதி முதல் செப்டம்பர் 21ஆம் தேதி வரை மேற்கொள்ளப்படும் பயணங்களுக்கான முன்பதிவுகளுக்கு மட்டுமே அது பொருந்தும் என்று இண்டிகோ கூறியது.
உள்நாட்டு விமானச் சேவைகளுக்கான ஒருவழிப் பயணக் கட்டணம் ரூ. 1,499ல் தொடங்கும். அனைத்துலகப் பயணங்களுக்கான தொடக்கக் கட்டணம் ரூ.4,399ஆக இருக்கும். ‘இண்டிகோஸ்டிரெட்ச்’ எனப்படும் பிசினஸ் வகுப்பு இருக்கைக்கான கட்டணத்தின் தொடக்க விலை இந்தத் தள்ளுபடியின்கீழ் ரூ.9,999 என்று கூறப்பட்டது.
கூடுதல் சேவைகள் தொடர்பிலும் சில சலுகைகளை இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.
உள்நாட்டு விமானச் சேவைகளில் முன்கூட்டியே பதிவுசெய்யப்படும் கூடுதல் பயணப்பைக்கான கட்டணத்தில் 50 விழுக்காடு வரை தள்ளுபடி வழங்கப்படும். அனைத்துலக விமானச் சேவைகளில் 15, 20, 30 கிலோ எடையிலான பயணப்பைக் கட்டணங்களில் சலுகை வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது.
குழுவாகப் பயணச்சீட்டுகளுக்கு விண்ணப்பிப்போர்க்கும் ‘கோட் ஷேர்’ எனப்படும் விமானச் சேவைப் பகிர்வுத் திட்டத்தின்கீழ் இயக்கப்படும் விமானங்களுக்கான பயணச் சீட்டுகளுக்கும் இந்தச் சலுகைகள் பொருந்தாது.