புதுடெல்லி: இந்தியாவின் புதுடெல்லி, சீனாவின் குவாங்ஸு ஆகிய நகரங்களுக்கு இடையில் நேரடி விமானங்கள் இயக்கப்படுவதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.
திங்கட்கிழமை (நவம்பர் 10) முதல் அந்த இரு நகரங்களுக்கும் இடையே ஏ-320 ரக விமானங்கள் இயக்கப்பட்டு வருவதாகவும் அவை இடைவெளி இல்லாத நேரடி விமானச் சேவை என்றும் இண்டிகோ விமான நிறுவனம் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 11) கூறியது.
சீனாவின் ‘சைனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ்’ விமான நிறுவனத்துடன் இண்டிகோ நிறுவனம் கைகோத்துச் செயல்படவுள்ளது.
அது தொடர்பான உடன்பாடு ஒன்றில் செவ்வாய்க்கிழமை அந்நிறுவனங்கள் கையெழுத்திட்டன.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான விமானப் போக்குவரத்து கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தடைபட்டிருந்தது.
இரு நாடுகளுக்கும் இடையிலான விமானச் சேவைகள் கடந்த 2020 ஆம் ஆண்டு ஏற்பட்ட எல்லைப் பிரச்சினைகள் மற்றும் கொவிட்-19 பெருந்தொற்றால் நிறுத்தப்பட்டிருந்தன.
இரு நாடுகளுக்கும் இடையே சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அக்டோபர் 26ஆம் தேதி கோல்கத்தாவில் இருந்து சீனாவின் குவாங்ஸு நகருக்கு இண்டிகோ நிறுவனம் முதல் விமானச் சேவையைத் தொடங்கியது.
தற்போது டெல்லியும் அதில் இணைக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அதேபோல சீனாவின் விமான நிறுவனமான ‘சைனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ்’ கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 9) இரு நாடுகளுக்கும் இடையிலான விமானப் பயணச் சேவையைத் தொடங்கியது. அன்றைய தினம் அதன் முதல் விமானம் ஷாங்காய் நகரில் இருந்து டெல்லி நோக்கி வந்தது. அதில் 248 பேர் பயணம் செய்தனர். அந்த விமானத்தின் மொத்த பயணிகளின் எண்ணிக்கையில் அது 95 விழுக்காடு.
புதன்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை என வாரத்திற்கு மூன்று விமானங்களை இயக்கப் போவதாக அது அறிவித்துள்ளது.

