புதுடெல்லி: இவ்வாண்டின் முதல் காலாண்டில் இண்டிகோ விமான நிறுவனத்தின் நிகர இலாபம் இரட்டிப்பானதாக அதன் தாய் நிறுவனமான ‘இன்டர்குளோப் ஏவியேஷன் லிமிட்டெட்’ தெரிவித்துள்ளது.
கடந்த 2023 ஜனவரி - மார்ச் காலகட்டத்தில் இண்டிகோ நிறுவனம் ரூ.919 கோடி நிகர இலாபம் ஈட்டியது. இந்நிலையில், இவ்வாண்டின் அதே காலகட்டத்தில் அதன் நிகர இலாபம் ரூ.1,894.8 கோடியாக அதிகரித்தது.
விமான எரிபொருள் விலை உயர்ந்தபோதிலும் மலிவுக் கட்டணம் விமானச் சேவை நிறுவனமான இண்டிகோ தொடர்ந்து ஆறு காலாண்டுகளாக இலாபம் ஈட்டி வந்துள்ளது.
இந்நிலையில், 2024 முதல் காலாண்டில் இண்டிகோ நிறுவனத்தின் வருவாய் 26 விழுக்காடு கூடி, ரூ.17,825.3 கோடியாகப் பதிவானது. 2023 முதல் காலாண்டில் அது ரூ.14,161 கோடி வருவாய் ஈட்டியிருந்தது.
மேலும், 2023-24 நிதியாண்டின் நான்கு காலாண்டுகளிலும் இலாபம் ஈட்டிய அந்நிறுவனம், இதுவரை இல்லாத வகையில் ஒரே நிதியாண்டில் ரூ.71,200 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. 2023-24 நிதியாண்டில் ரூ.8,200 நிகர இலாபத்தையும் அது பதிவுசெய்துள்ளது.

