புதுடெல்லி: கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக டெல்லியில் நடைபெற்று வந்த போராட்டத்தின் பின்னணியில் பாகிஸ்தானில் இருந்து இயக்கப்பட்ட போலி சமூக ஊடகக் கணக்குகள் இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அந்தக் கணக்குகளை டெல்லி காவல்துறை முடக்கியுள்ளது.
நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததையடுத்து, இந்தியக் கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் பதவிவிலக வலியுறுத்தி டெல்லியில் போராட்டங்கள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு பாகிஸ்தானில் இருந்து மறைமுக ஆதரவு கிடைத்ததாகச் சந்தேகம் எழுந்தது. குறிப்பாக, பாகிஸ்தானில் இருந்து இயக்கப்பட்ட பல்வேறு சமூக ஊடகக் கணக்குகளின்மூலம் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாகப் பிரசாரம் மேற்கொள்ளப்படுவதை டெல்லி காவல்துறையினர் கண்டறிந்தனர்.
இதையடுத்து, அவற்றை அடையாளம் கண்டு முடக்கும் நடவடிக்கையைத் தொடங்கியதாக டெல்லி மத்திய காவல்துறை துணை ஆணையர் ரோஹித் ராஜ்வீர் தெரிவித்தார்.
குறிப்பிட்ட அந்த சமூக ஊடகக் கணக்குகளின் மூலம் போலியான உள்ளடக்கம் பரப்பப்படுவதாகவும் செயற்கை நுண்ணறிவு மூலம் போலி உள்ளடக்கங்களுடன் பல்வேறு போலியான புகைப்படங்கள் உருவாக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இதையடுத்து. 400 சமூக ஊடகக் கணக்குகள் முடக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
குப்பைகளை அகற்றிய போராட்டக்காரர்கள்
இதனிடையே, டெல்லியில் நடைபெற்ற போராட்டம் முடிவுக்கு வந்ததையடுத்து போராட்டக் களத்தைச் சுத்தம் செய்யும் பணியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் ஈடுபட்டனர்.
ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்த போராட்டத்தால் ஜந்தர் மந்தர் பகுதி குப்பைமேடாக காட்சியளித்தது. இதையடுத்து சிஜேபி கட்சியினர் இரவோடு இரவாக அங்கு அமைத்திருந்த பந்தல்களை அகற்றினர். மேலும், ஜந்தர் மந்தரில் குவிந்திருத்த குப்பைகளையும் அவர்கள் அகற்றினர்.
இதற்கிடையே, ஜந்தர் மந்தர் பகுதியில் இருந்து 42,000 கிலோ கழிவுகளை அகற்றியதாக டெல்லி மாநகராட்சி தெரிவித்தது.

