புதுடெல்லி: சீன எல்லைக்கு அருகே அமைந்துள்ள இந்தியாவின் புதிய ஆகாயப்படைத் தளம் செயல்படத் தொடங்கியிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. ஆகாயப்படைத் தளபதி ஏ பி சிங், ராணுவப் போக்குவரத்து விமானத்தில் முதன்முறையாக அங்குத் தரையிறங்கியதாகத் தற்காப்புத் துறை அதிகாரி ஒருவர் வியாழக்கிழமை (நவம்பர் 13) தெரிவித்தார்.
இரு நாட்டுக்கும் இடையே உறவு மேம்பட்டுவரும் நிலையில், இந்திய ஆகாயப்படைத் தளம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. எல்லைப் பகுதியில் ராணுவப் பதற்றத்தைக் குறைத்துக்கொள்ள இரு தரப்பும் கடந்த மாதம் (அக்டோபர் 2025) வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தைச் செய்துகொண்டன. இவ்வாண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சீனாவுக்குச் சென்றிருந்தார்.
சி-130ஜே ரக விமானத்தின் மூலம் ஆகாயப்படைத் தளபதி சிங், லடாக்கில் உள்ள முத்-நியோமா ஆகாயப்படைத் தளத்திற்குப் புதன்கிழமை (நவம்பர் 12) சென்றுசேர்ந்தார். அந்த ஆகாயப்படைத் தளம் சுமார் 4,000 மீட்டர் உயரத்தில் உள்ளது.
இந்திய ஆகாயப்படையும் தற்காப்பு அமைச்சும் புதிய தளம் குறித்து உடனடியாகக் கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை.
புதிய ஆகாயப்படைத் தளம், சீனாவுடனான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு 30 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதாகக் கூறப்பட்டது.
சீனாவுக்கும் அதே உயரத்தில் ஆகாயப்படைத் தளமொன்று உள்ளது.
பதற்றம் தணிந்தாலும் புதுடெல்லிக்கும் பெய்ஜிங்கிற்கும் இடையிலான நம்பிக்கையின்மை தொடர்வதாக இந்திய வல்லுநர்களும் அதிகாரிகளும் தெரிவித்தனர். இவ்வாண்டு எல்லைப் பகுதியில் இரு தரப்பும் படையினரின் எண்ணிக்கையையும் உள்கட்டமைப்பு வசதிகளையும் அதிகரித்திருப்பதை இந்திய ஆகாயப்படைத் தளபதி சுட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
இந்தியாவும் சீனாவும் 3,800 கிலோமீட்டர் நீடிக்கும் எல்லைப் பகுதியைப் பகிர்ந்துகொள்கின்றன. எல்லைப் பகுதி சரியாக வரையறுக்கப்படாததால் 1950களில் இருந்தே இரு தரப்புக்கும் இடையே அதன் தொடர்பில் சர்ச்சை நிலவுகிறது. 1962ல் இரு நாடுகளுக்கும் இடையே குறுகிய காலத்திற்குக் கடுமையான போர் நடந்தது.

