தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குறிப்பேடுகளுக்கு இடையே வைத்து 400,000 அமெரிக்க டாலரை வெளிநாட்டிற்குக் கடத்த முயற்சி

2 mins read
602f4b41-f982-4226-9a8a-f29d6b7bd615
கைப்பற்றப்பட்ட பணம் முழுவதும் நூறு டாலர் தாள்கள் என்று சுங்கத்துறை தெரிவித்தது. - படம்: இந்திய ஊடகம்

புனே: மாணவிகள் மூவர் தங்களது குறிப்பேடுகளுக்கு (notebook) இடையே 400,000 அமெரிக்க டாலரை (S$534,000, ரூ.3.47 கோடி) மறைத்து வைத்து எடுத்துச் செல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துபாய்க்குச் செல்ல முயன்ற அந்த மூன்று மாணவிகளையும் புனே விமான நிலை சுங்கத்துறை அதிகாரிகள் இடைமறித்து, சோதனை செய்தபோது இந்தக் கடத்தல் முயற்சி வெளிச்சத்திற்கு வந்தது.

இதன் தொடர்பில் புனேயைச் சேர்ந்த பயண முகவர் ஒருவரும் மும்பையைச் சேர்ந்த அந்நியச் செலாவணி வணிகர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அந்தப் பயண முகவர்தான் அம்மூன்று மாணவர்களுக்கும் துபாய் செல்ல பயணச்சீட்டு முன்பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவத்தின் பின்னணியில் ஹவாலா கும்பலுக்குத் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் சுங்கத்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.

குறிப்பேடுகளின் பக்கங்களுக்கு இடையே வெளிநாட்டுப் பணத்தை மறைத்து எடுத்துச் செல்வதாகப் புனே சுங்கத்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

அதனையடுத்து, துபாயில் தரையிறங்கும் அந்தக் குறிப்பிட்ட மூன்று மாணவிகளையும் திருப்பி அனுப்பும்படி இந்திய அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து, இம்மாதம் 17ஆம் தேதி துபாயிலிருந்து புனேக்கு அம்மூவரும் அனுப்பி வைக்கப்பட்டனர். விமான நிலையப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் அவர்களை முழுமையாகச் சோதித்தபோது, நூறு டாலர் தாள்களாக மொத்தம் 400,100 அமெரிக்க டாலர் அவர்களின் குறிப்பேடுகளுக்கு இடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அம்மூன்று மாணவிகளும் முதுநிலைப் பட்டக் கல்வி பயின்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

விசாரணையில் புனேயைச் சேர்ந்த குஷ்பூ அகர்வால் என்ற பயண முகவர் அவர்களுக்குப் பயணச்சீட்டு முன்பதிவு செய்து தந்ததாகவும் அவரே அப்பணம் அடங்கிய பைகளைத் தந்ததாகவும் அம்மாணவிகள் கூறினர்.

குறிப்புச் சொற்கள்