ஜான்சி: உத்தரப் பிரதேச மாநிலத்தில் யாருக்கும் சந்தேகம் வராத வகையில், வீட்டின் முற்றத்தில் அமைக்கப்பட்டிருந்த அடிகுழாயின் வழியாகக் கள்ளச்சாராயத்தை வெளியே எடுத்து விற்பனை செய்த நூதன மோசடியை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் உள்ள தேஜ்புரா குராட் கிராமத்தில் சட்டவிரோதமாகப் பதுக்கிவைத்து கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாகக் காவல்துறை, கலால்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதைடுத்து, கடந்த நவம்பர் 21ஆம் தேதி கூட்டுப்படை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வீட்டில் சோதனை நடத்தினர். சோதனையின்போது, வீட்டின் முற்றத்தில் இருந்த அடிகுழாயை அதிகாரிகள் இயக்கினர்.
அப்போது, நிலத்தடி நீருக்குப் பதிலாகப் பம்பிலிருந்து கள்ளச்சாராயம் கொட்டியதைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
கள்ளச்சாராயத்தை நிலத்துக்கு அடியில் ரகசியத் தொட்டிகளில் பதுக்கி வைத்து, அதனுடன் அடிகுழாயை இணைத்து யாருக்கும் சந்தேகம் ஏற்படாத வகையில் சாராயத்தை வெளியே எடுத்து வந்துள்ளனர்.
அதிகாரிகள் அடிகுழாயை இயக்கிச் சாராயத்தை வெளியேற்றும் காணொளிக் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்த நடவடிக்கையின்போது, விற்பனைக்காகத் தயாராக வைக்கப்பட்டிருந்த ஏறக்குறைய 30 லிட்டர் கள்ளச்சாராயத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், நிலத்தடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஏறக்குறைய 1,000 லிட்டர் கள்ளச்சாராயத்தைச் சம்பவ இடத்திலேயே கொட்டி அழித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக அதே கிராமத்தைச் சேர்ந்த 30 வயதுப் பெண் ஒருவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அவர் மீது கலால் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இதன் பின்னணியில் வேறு யாருக்கும் தொடர்புள்ளதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
