கலப்புமணத் தம்பதியைத் துன்புறுத்திய நால்வர் கைது

கலப்புமணத் தம்பதியைத் துன்புறுத்திய நால்வர் கைது

1 mins read
35fdc33c-b83c-425f-88c5-8dc06252cf14
கலப்புத் திருமணம் செய்துகொண்ட தம்பதியை அடித்து உதைத்ததாகக் கூறி கைதுசெய்யப்பட்ட நால்வர். - படம்: இந்திய ஊடகம்

ஹைதராபாத்: கலப்புத் திருமணம் செய்துகொண்ட இணையர்களைத் துன்புறுத்திய நால்வரை இந்தியாவின் ஹைதராபாத் மாநிலக் காவல்துறையினர் கைதுசெய்தனர்.

அந்த இணையர்க்குத் திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ளது.

இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை (மார்ச் 24) ஹைதராபாத்தின் புகழ்பெற்ற சார்மினார் பகுதிக்கு அவர்கள் சென்றிருந்தபோது இருவரும் வெவ்வேறு சமயத்தினர் என்பதை அறிந்த சிலர் அவர்களுடன் வாக்குவாதத்தில் இறங்கினர். அந்த ஆடவரை அடித்து உதைத்தனர்.

அந்த ஆடவர் எந்தச் சமயத்தைச் சேர்ந்தவர் என்பதை மெய்ப்பிக்க, அவருடைய ஆதார் அட்டையையும் அக்கும்பல் கேட்டது. மனைவி எவ்வளவோ மன்றாடியும் அக்கும்பல் அந்த ஆடவரைத் துன்புறுத்துவதை நிறுத்தவில்லை.

இதுதொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவலானது.

இதனையடுத்து, செவ்வாய்க்கிழமை தானாகவே முன்வந்து வழக்குப்பதிவு செய்த காவல்துறை, குற்றவாளிகளைப் பிடிக்க சிறப்புக் குழுக்களை அமைத்தது.

அதற்கு மறுநாளே, கணவன் - மனைவியைத் துன்புறுத்திய சந்தேகத்தின்பேரில் நால்வரைக் காவல்துறை கைதுசெய்தது.

துன்புறுத்தல் தொடர்பான காணொளி அவர்களின் கைப்பேசிகளில் பதிவாகி இருந்ததாகக் கூறப்பட்டது. அவை பறிமுதல் செய்யப்பட்டன.

“நால்வரும் அந்தத் தம்பதியரைத் தாக்கினர். அவர்களின் குழந்தையையும் அக்கும்பல் தாக்க முயன்றது,” என்று காவல்துறை உதவி ஆணையர் சந்திரசேகர் கூறினார்.

கைதுசெய்யப்பட்ட நால்வரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவர் என்றும் அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்