புதுடெல்லி: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வருவதால், உட்கட்சிப் பூசல்களைக் களைய வேண்டும் என தமிழக பாஜகவினருக்கு மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா அறிவுறுத்தி உள்ளார்.
டெல்லியில் தமிழக பாஜக உயற்மட்டக் குழுவுடன் ஆலோசனை நடத்திய அவர், தேர்தலுக்கான கூட்டணியை வலுப்படுத்துவது, கூட்டணியில் புதிய கட்சிகளை இணைப்பது ஆகியவை குறித்து நிர்வாகிகளின் கருத்துகளைக் கேட்டறிந்தார்.
மேலும், உட்கட்சிப் பூசல்களும் கருத்து வேறுபாடுகளும் அதிகரிப்பது கட்சியின் வளர்ச்சிக்கு நல்லதல்ல என்றார் அமித்ஷா.
“தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கருத்து வேறுபாடுகளுக்குத் தீர்வு காணப் பாருங்கள்,” என்று அமித்ஷா அறிவுறுத்தியதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை பங்கேற்கவில்லை. எனினும், இது குறித்து பாஜக தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்க தமிழக பாஐக நிர்வாகிகள் யாரும் முன்வரவில்லை.

